தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை இரண்டாகப் பிரிக்கும் சமஷ்டி அரசியலமைப்பையே கோருகிறது. அதனை அடைந்துகொள்வதற்காகவே 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் என பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்துரைத்த அவர்,
இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் நேற்று கறுப்பு நாளாக பதிவாகியுள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாட்டைப் பாதுகாக்கும் வகையிலும் குரல்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு பாராளுமன்றம் செல்வதற்கு ஒரு வார காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்ற ஜனநாயகத்தை முழுமையாக மீறியுள்ளது. எனவே தற்போதைய சபாநாயகர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப பணியாற்றுகிறாரா? என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
ஜனநாயம் பற்றி கடந்த காலங்களில் பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டையும் நேற்று பாராளுமன்றில் கண்டுகொள்ள முடிந்தது.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தினேஷ் குணவர்தனவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஏனெனில் தற்போதைய அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கத்திற்கு ஏற்ப செயற்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை இரண்டாகப் பிரிக்கும் சமஷ்டி அரசியலமைப்பையே கோருகிறது.
அதனை அடைந்துகொள்வதற்காகவே 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
தற்போதைய அரசாங்கம் ஏகாதிபத்தியத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. நாட்டில் சட்ட ஆட்சியை உரிய முறையில் முன்னெடுப்பதாக இல்லை.
தேசிய வளங்களை விற்பனை செய்ய முற்படுவதுடன் சமஷ்டி முறையிலான அரசிலமைப்பை கொண்டுவந்து நாட்டை துண்டாடுவதற்கும் முற்படுகிறது.
அதனைச் செய்து கொள்வதற்காகவே அரசாங்கத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் எதிர்த்தரப்பினரை தண்டித்து அடக்குவதற்கு முற்படுவகிறார்கள்.
இதேவேளை, சபாநாயகர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப பணியாற்றுகிறாரா? என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com