இரண்டு ஆண்டுகள் பொறுமைகொள்ள முடியாது : சம்பந்தன் சபையில் கொந்தளிப்பு

r_sambanthan_001வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க இரண்டு ஆண்டுகள் காத்திருக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது.

எனினும், ஐ.நா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்புக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க முடியாது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி பொது மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைக்க முடியாது. அவ்வாறு காணிகளை கையகப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த காணிகளில் தேவைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், காணிகளுக்கு சொந்தமான பொது மக்கள் வீதியில் போராடுகின்றனர்.

எனவே, படையினர் வசமுள்ள காணிகளை விரைவில் விடுவிக்க வேணடும் என இரா. சம்பந்தன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணிகளை விடுவிக்க 2 வருடங்கள் பொறுத்திருக்க முடியாது! இரா. சம்பந்தன் (2 ஆம் மேலதிக இணைப்பு)

நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுவது குறித்து எம்மால் எதுவும் கூறமுடியாது.

எனினும் எமது மக்களின் காணிகளை விடுவிப்பதற்காக மேலும் இரண்டு வருடங்கள் பொறுத்திருக்க முடியாது.

மக்கள் விரக்தியின் விளிம்புக்கு வந்து விட்டனர் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களாகின்றன. தற்போது வரையில் எமது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் பரம்பரையாக வாழ்ந்த சொந்த நிலங்களில் படையினர் நிலை கொண்டுள்ளனர்.எமது மக்களின் பூர்வீக காணிகளில் படையினர் ஆக்கிரமித்திருப்பதற்கு தேசிய பாதுகாப்பை காரணம் காட்டுகின்றார்கள்.

அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் நெருக்கடிக்குள் வாழ்கின்றனர்.

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் படையினர் அந்த நிலங்களில் தோட்டங்கள் செய்கின்றார்கள், பொழுதுபோக்கு இடங்களை அமைக்கின்றார்கள், மரங்களை வளர்க்கின்றார்கள், வியாபாரம் செய்கின்றார்கள். அந்த நிலத்திற்கு சொந்தமான மக்கள் வீதியில் இருக்கின்றார்கள்.

இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுவது எந்த வகையில் நியாயமானதாகும். தேசிய பாதுகாப்பை காரணம் காட்டியிருக்கும் அவர்கள் இவ்வாறு செயற்பட முடியாது அவ்வாறு செயற்படுவதை ஏற்கவும் முடியாது.

ஆகவே அவர்கள் அந்த நிலங்களை மீளவும் மக்களிடத்தில் கையளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் காணிகள் மீண்டும் மக்களிடத்தில் கையளிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் விரைந்தெடுக்கப்படவேண்டும்.

உள்ளிட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த பிரேரணைக்கு அரசாங்கம் இணை அனுசரணையும் வழங்கியுள்ளது.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரும் காணிகள் விடுவிப்பு தொடர்பாக தனது கரிசனையை கூறியுள்ளதோடு விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவையும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சுமார் 9 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதேநேரம் இம்முறை நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34வது மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 6ஆயிரம் ஏக்கர் அரச தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த இரண்டு கூற்றுக்களுக்குமிடையில் பரஸ்பர முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே இந்த பரஸ்பர முரண்பாட்டை தீர்ப்பதாயின் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பாக மீள் கணக்கீடு செய்யப்படவேண்டியுள்ளது.

யாழ். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் மற்றும் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் தொடர்பாக இந்த சபையில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

யாழ் மாவட்டத்தில் 5250 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 1853 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 400 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன.

இது மட்டுமல்ல வவுனியாவிலும், மன்னாரிலும் இதே நிலைமை தான் காணப்படுகின்றது. அது தொடர்பான தகவல்களும் உள்ளன.பொதுமக்களுக்கு சொந்தமான இந்தக் காணிகளை விடுவிக்காதிருப்பதற்கு எந்த நியாயப்படுத்தல்களையும் கூறமுடியாது.

மக்களுக்கு சொந்தமான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையானது மனித உரிமை மீறலாகும். அடிப்படை உரிமை மீறலாகும்.

நடைபெற்ற வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 34வது கூட்டத்தொடரில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக இரண்டு வருட கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது. அந்த கால அவகாசம் வழங்கப்படுமா இல்லையா என்பது தொடர்பாக எம்மால் எதனையும் சொல்ல முடியாது.

படையினர் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் ஆக்கிரமிப்பை விடுவிப்பதற்கு இரண்டு வருட காலம் எம்மால் காத்திருக்க முடியாது. கேப்பாபுலவு உட்பட பல இடங்களில் மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் வீதியில் வெயிலுக்குள்ளும் மழைக்குள்ளும் இருக்கின்றார்கள்.அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு ஜனாதிபதியை நான் நேரடியாகச் சந்தித்தேன். எமக்கு முன்னாலேயே முப்படைத்தளபதிகளுடன் தொடர்பு கொண்டு பணிப்புரைகளை விடுத்தார்.

உ்டனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கு எமது நன்றிகள்.அதேபோன்று வடக்கில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உடன் பணிப்புரை விடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.

எமது மக்கள் விரக்தியின் விளிம்புக்கு வந்துவிட்டனர். காலம் தாழ்த்தாது உடன் நடவடிக்கைளை எடுங்கள் என்று இந்த சபையில் கோருகின்றேன். என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: