இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதுடன், உடனடியாக விசாரணையை தொடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு குழு சார்பில் இன்று சனிக்கிழமை சென்னையில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த கையெழுத்து இயக்கத்தை நடிகர் சத்யராஜ் தொடக்கி வைத்தார்.
மக்களவை உறுப்பினர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், பேரறிவாளன் தாயார் அற்பதம்மாள், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன், முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு குழு ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசியதாவது:
ஜல்லிகட்டு மற்றும் நெடுவாசல் போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்தது போல், இலங்கை தமிழர்களுக்கான நீதி விசாரணைக்காகவும் சமூக வலைதளங்கள் மூலம் போராட இளைஞர்கள் முன் வர வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து 18 மாதங்கள் ஆகியும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியும் இலங்கை எடுக்காத நிலையில், விரைவில் சர்வதேச நீதிபதிகள் மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த கையெழுத்து இயக்கம் ஒரு துவக்கம் தான். இது உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். இலங்கை பிரச்னையில் மனிதம் காக்கப்பட வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் பேசியதாவது:
இலங்கையில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்ப ட்டுள்ளதாகவும், 55 முகாம்களில் தமிழப் பெண்கள் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாலியல் அடிமைகளைக ஈடுபடுத்தியதை ஐ.நா.மனித உரிமை ஆணையர் யாஸ்மின் சூக்கா தனது அறிக்கையில் தெளிவுபட குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே மத்திய அரசு இலங்கை மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
– Dina Mani