ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் துணைத் தூதர் மேஜர் ஜனரல் சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி பத்து அனைத்துலக மனித உரிமைகள் குழுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சித்திரவதைகள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்கள் போன்ற போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பதையும் மனித உரிமைக் குழுக்கள் பான் கீ மூனுக்கு அனுப்பி வைத்துள்ள தமது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளன.
போர்க்குற்றவாளி ஒருவரை ஐ.நா தனது பதவித் தரத்தில் வைத்துள்ளது. இது ஒரு உளவியல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என்று அமெரிக்கப் பல்கலைக்கழக வொசிங்டன் சட்டக் கல்லூரியின் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் அலி பேடன் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய அனைத்துலக கட்டமைப்பான ஐ.நா அமைதி மற்றும் நீதியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேஜர் ஜனரல் சவேந்திர சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டியது ஐ.நாவின் கடமை. தனது குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு அவர் இராஜதந்திர விலக்குரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
போர்க்குற்றங்களிலும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்ட சவேந்திர சில்வாவின் இராஜதந்திர விலக்குரிமையை ரத்துச் செய்து அவரது அறிமுக ஆவணத்தை நிராகரித்து, அவரை விசாரணை செய்வதற்கு ஐ.நா. ஒத்துழைக்க வேண்டும் என்று பத்து மனித உரிமை அமைப்புகளும் கேட்டுள்ளன.
உலகெங்கும் 22 முன்னாள் இராணுவ அதிகாரிகள் இலங்கை அரசால் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் அனைத்துலக முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது என்றும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன.