மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.ஆகவே, தொடர்ந்து மக்களை ஏமாற்றாமல் அவர்களின் சொந்தக் காணிகளை மீள்வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை தமக்கு மீள்வழங்குமாறு வலியுறுத்தியே பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் வரையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
அந்த போராட்டத்தின் விளைவாக கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் குறிப்பிட்ட தொகையான காணிகள் விடுவிக்கப்பட்டன. எனினும் முழுமையான காணிகளும் விடுவிக்கப்படவில்லை.
மேலும் கேப்பாப்புலவு பூர்வீக மக்களும் தற்போது தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அந்த மக்கள் தமது காணிகள் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்து வருகின்றனர்.
தமது சொந்தக்காணிகளில் கால்களைப் பதிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மிகவும் திட்டவட்டமான முறையில் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த மக்களும் தற்போது 20 நாட்களுக்கும் மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
ஆனால், இதுவரை அந்த மக்களின் போராட்டத்திற்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையிலான தீர்வெதுவும் முன்மொழியப்படவில்லை.
மக்கள் தொடர் போராட்டத்தை பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் நடத்தி வருகின்ற நிலையிலும், அரசாங்கமானது அது தொடர்பில் செவி மடுக்காத போக்கையே கொண்டுள்ளது.
இந்த மக்களின் போராட்டம் நியாயமானது என்பதைக்கூட எந்தவொரு அரசாங்கத் தரப்பும் எடுத்துக்கூறுவதை காணமுடியவில்லை. இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத் தரப்பு கவனத்தில் கொள்ளாமல் இருக்கின்றதே என்ற கவலையும் ஆதங்கமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எனினும் அந்த மக்கள் சற்றும் சளைக்காமல் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள் வழங்கக்கோரிதொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு மக்கள் அஹிம்சை ரீதியில் தமது காணிகளை விடுவிக்கும் நோக்கில் போராட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலும் அப்பாவி மக்களின் காணி விவகாரம் எதிரொலித்துள்ளது.
எனவே, அரசாங்கம் இந்த மக்களின் காணிகளை மீள் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கின்றது.காணிகளை இழந்துள்ள மக்கள் உறவினர், நண்பர்கள் இல்லங்களிலும் நலன்புரி முகாம்களிலும் தஞ்சமடைந்து பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, அந்த மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு அவசியமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பாவி மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் அக்கறை காட்டி வருகின்றார்.
பல்வேறு தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்களின் சொந்தக்காணிகள் மீள் வழங்கப்படவேண்டுமென்றும் இழந்துள்ள பொதுமக்கள் எதிர்கொள்கின்ற கஷ்டங்களை தான் நேரில் பார்த்ததாகவும் கூறியிருந்தார்.
அதுமட்டுமன்றி பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் விசேட செயலணியொன்றையும் உருவாக்கியிருந்தார்.
ஆனால், இதுவரை பொதுமக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. புதியஅரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் குறிப்பிடத்தக்க ஏக்கர் காணிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தன.
ஆனால், இன்னும் அதிகளவான காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன. இந்த நிலையில் மக்களின் தொடர் போராட்டங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில் இந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்ற சூழலில் அரசாங்கம் தொடர்ந்தும் இந்த மக்களை காத்திருக்க வைக்கக்கூடாது.
அவர்கள் அரசாங்கத்தின் காணிகளை கேட்கவில்லை. மாறாக தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளையே மீள் வழங்குமாறு வலியுறுத்துகின்றனர்.
எனவே, அரசாங்கம் இதனை ஆழமான முறையில் கருத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கம்ஆரம்பத்தில் காணிகளை விடுவித்ததைப் போன்று விரைவாக அனைத்து காணிகளையும் விடுவிக்குமென எதிர்பார்த்தபோதும் அவ்வாறு நடைபெறவில்லை.
அதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.ஆகவே, தொடர்ந்து மக்களை ஏமாற்றாமல் அவர்களின் சொந்தக் காணிகளை மீள்வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-http://www.tamilwin.com