ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்த மனுவை சென்னை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிகமான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த இனப்படுகொலை குறித்து தமிழகத்தை சேர்ந்த ஆர்எம். தம்பி என்பவர் சென்னை உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த இனப்படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தி அதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவானது நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி, இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டது மிகவும் மோசமான ஒன்று. அந்த ஆதங்கத்தை மனுதாரர் ஆகிய உங்களிடம் நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்.
ஆனால், இந்த விடயத்தில் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. இலங்கையில் நடைபெற்ற யுத்தம் என்பதால் அதனை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் இது எல்லை தாண்டிய விவகாரம் எனவும் கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட மனுதாரர், அயல் நாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படும்போது மத்திய அரசு தலையிடுகிறது தானே என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நீதிபதி, அரசாங்கம் சார்பில் இதுபோன்று தலையீடு இருக்கலாம் ஆனால் அயல்நாட்டு விவகாரத்தில் நீதித்துறை தலையிட முடியாது எனக்கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com