இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கான எழிலன் உள்ளிட்டவர்களின் ஆட்கொணர்வு மீதான விசாரணை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்றைய தினம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களுடன் இடம்பெற்றிருந்த நிலையில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தன நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது சாட்சியமளித்த மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தன, சரணடைந்தவர்கள் குறித்து தனக்கு எதுவும், தெரியாது எனவும், இறுதிப் போரின் போது 58ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, சரணடைந்தவர்கள் தொடர்பில் சாட்சியம் வழங்க மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே மன்றில் ஆஜராக வேண்டும் என காணாமல் போனவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரத்னவேல் கோரிக்கை விடுத்தார்.
எனினும், இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு வெளியிட்டதுடன், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றுக்கு அழைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், காணாமல் போனவர்கள் சார்பில் முன்னிலையாகி உள்ள சட்டத்தரணி ரத்னவேல் வழக்கை திசைத்திருப்ப முற்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
எவ்வாறாயினும் இறுதிப்போரில் 58ஆவது படைப்பிரிவே முக்கிய பங்காற்றியது. எனவே, படையினரிடம் சரணடைந்த விவகாரம் தொடர்பில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று சட்டத்தரணி ரட்ணவேல் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, குறித்த வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் இந்த கோரிக்கை தொடர்பில் நீதிமன்றத்தின் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com