சிதைக்கப்பட்ட தமிழீழ பொற்கால ஆட்சி… யார் பிரபாகரன்? அழிக்கப்பட்டது புலிகளா??

Kilinochchiஒரு காலத்தில் சிறப்போடு இருந்த கிளிநொச்சி பற்றி இன்று சிந்திக்கும் போது ஓர் இனம் புரியா வேதனைக் கலந்த எண்ண அலையோட்டங்கள் மனதில் தோன்றுகின்றது.

ஒன்றை அழிக்க நினைப்பவன் நிச்சயமாய் தன்னைத் தானே அழித்துக் கொள்வான் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமாகத்தான் படுகின்றது. ஆனால் தமிழனத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு வெற்றி கிட்டி விட்டதா?

நம் இனத்தை அழிக்க, அடக்க திட்டமிடுபவர்கள் மிக விரைவில் அடங்கிப் போவார்கள். இன்று வெளிப்படையாக விடுதலைப் புலிகளை வீழ்த்தி விட்டோம் என்பவர்கள் மறைமுகமாகக் கூறுவது “ஈழத்தமிழரை வீழ்த்தி விட்டோம்” இதனைத் தான்.

மார் தட்டிக் கொள்ளும் மாவீரர்களுக்கு பஞ்சமில்லை. காரணம் எம்மை அழிப்பது எம் மனம் என்பதைப் போல் தமிழனை அழிப்பதும் தமிழனே. தெளிவாக சொன்னால்.,

“நெற்றிக் கண்ணைப் பார்த்தாலும் படியாது, குற்றம் குற்றமே எனும் தமிழினத்தில் எட்டப்பர்களை தேடித்தான் பிடிக்க வேண்டுமா? என்ன.

விடயத்திற்கு வருவோம்., நேற்று இருந்த நிலை இன்று இல்லை, அதுவே நாளையும் தொடரும் என்பதும் கூட நம்பிக்கை இல்லை. ஆனாலும் எதுவாக இருந்தாலும் சுற்றும் காலச்சக்கரம் நம்பிக்கை எனும் ஆற்றலினாலேயே இயங்குகின்றது.

ஒரு காலத்தில் தமிழீழத்தின் அதிக நிலப்பரப்பு இருந்தது புலிகளின் கட்டுப்பாட்டில். அப்போது கிளிநொச்சி நகரைத் தலைநகராகக் கொண்டு புலிகள் “தமிழீழம்” எனும் தனியாட்சி செய்து வந்தனர்.

செழிப்பு மிக்க ஆட்சிகாலம் அது. அத்தோடு ஓர் பொற்கால ஆட்சி அது என்பதனை இன்றும் மக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

அதன்படி புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழீழத்தின் தேசியத் தலைவராக மக்கள் மனதார ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அவர் வழி வாழ்ந்தனர்.

அப்போதைய கிளிநொச்சி அடடா., பள்ளிகள், வணிக நிறுவனங்கள், கலைக் கூடங்கள், வைத்தியசாலைகள், நீதிமன்றம், காவற்துறை உட்பட எதிலும் குறை இருக்கவில்லை.

தமிழ் நாடு இதுவல்ல ஆனால் தமிழர் நாடு இது வென்றும் கூறமுடியும். இங்கு புறநானூற்றில் ஓளவை பாடியதும் நினைவு வருகின்றது.,

“எவ்வழி நல்லவர் ஆடவர்.. -அவ்வழி நல்லை வாழிய நிலனே”

எங்கு மக்கள் நல்லவர்களாக வாழ்கின்றார்களோ அந்த நிலமே நல்ல நிலம். இதனை தமிழன் என்ற ரீதியில் பெருமையாகக் கூற முடியும் கிளிநொச்சி அத்துனை சிறப்பை பெற்றிருந்தது. ஆட்சியிலும் சரி குடிமக்களாலும் சரி.

காரணம் இல்லாமல் இல்லை “கோன் எவ்வழி, குடியும் அவ்வழிதானே”. தலைவன் வழி மக்களும். இன்றும் பிரபாகரனின் ஒழுக்கத்தை குறைகூற தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முன்வரவில்லை.

இன்று வடக்கு மக்கள் தம் உரிமைகள் வேண்டி போராட்டம் மட்டுமே வாழ்வென வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் இருந்த நிலை இதுவா??

அப்போது தமிழீழ அரசின் தலைமைச் செயலகம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. அங்கு தமிழீழ காவல்துறை, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைகள், கல்விக் கழகம், கலையோடு பண்பாட்டுத்துறை முதலிய பல்வேறு துறைகளை வளர்க்கும் பணியகங்கள் இருந்தன.

தமிழீழம் தனக்கே உரியதாக வகுக்கப்பட்ட சட்டங்களை கற்பிக்கும் சட்டக் கல்லூரி வரை கிளிநொச்சியில் இயங்கி வந்தது.

கற்பித்தது மட்டும் அல்ல வழக்குகளை முறையாக நடத்தித் தீர்ப்பு வழங்குவதற்கும் தமிழீழ தலைநகரில் நீதிமன்றங்கள் வரையிலும் சிறப்பாகத்தான் இயங்கி வந்தன.

குற்றங்களை விசாரித்து தீர்ப்பு கொடுத்தால் மட்டுமே போதுமோ?? இல்லை காவல் துறையும் நீதித் துறையும் கைகோர்த்து குற்றங்கள் நிகழாமல் நாட்டைக் பாதுகாத்து செயற்பட்டன.

இலங்கையில் ஓர் தொன்மையான பழக்கம் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றது அதுவே மெய்யான வரலாற்றை மறைப்பது. வரலாற்று ரீதியில் மட்டுமல்லாது, கல்விச் செயற்பாட்டிலும் இது காணப்படுகின்றது.

இலங்கை கல்வி முறையில் இன்றும் இருப்பது ஓர் முரண்பட்ட முறையே. அந்தவகையில் தமிமீழத்தின் தமிழர் தொன்மை கற்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், மறைக்கப்படும் தமிழர் தாயகம் அறியப்பட வேண்டும் என்பதற்காகவும்.,

தமிழ்க் குழந்தைகள் தமிழர் வரலாற்றைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழீழ கல்விக் கழகம் பல நூல்களையும் பிரசவித்தது.

பிரசவமான அந்த நூல்களின் அடிப்படையில் வடக்கு மாணவர்களுக்கு தமிழர் வரலாறு சரியாக கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தன.

ஒரு விடயத்தை நினைவு படுத்த வேண்டும் இங்கு. தமிழர்களிடம் நவீனத்தில் ஒரு மாறுபட்ட கொள்கை பரவிக் கொண்டு வருகின்றன. அதாவது எங்கும் தமிழைக் காண வேண்டும் எதிலும் தமிழை புகட்ட வேண்டும் என்பது.

பெரும்பாலும் நுனிநாக்கில் ஆங்கில கலப்பு உள்ள பல தமிழர்களும் இதனைக் கடைப்பிடித்து வருவதால் தமிழின் சிறப்பும் ஒருவகையில் மழுங்கப்பட்டு கொண்டு வருகின்றது.

ஆனால் கிளிநொச்சி தமிழை மெய்யாக வாழ வைத்தது. அங்கிருந்த வணிகமனைகள் சேரன், சோழன், பாண்டியன், இளந்தென்றல் போன்ற தமிழ்ப் பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டன.

முக்கியமாக இங்குள்ள வணிக நிலையங்கள் நல்ல தமிழ் பெயர் கொண்டிருந்தால் மட்டுமே அதற்கான உரிமம் வழங்கப்பட்டது. அத்துணை அளவு தமிழை மெய்யாகக் காத்து உயர்ந்து நின்றது கிளிநொச்சி.

தமிழமுதம் எனும் நிறுவனம் தமிழ் பெயர் வைக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதற்காக தமிழீழ அரசினால் சேமிப்பு வைக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியான பின்னர் அதனை வட்டியோடு அரசே கொடுத்து வைக்கும்.

சங்கங்கள் அமைத்து தமிழை ஒரு காலத்தில் வளர்த்தார்கள் என்பது கற்றறிந்த வரலாறு அதனை கண் முன் காட்டியது தமிழீழ அரசு.

கலை பண்பாடு பாரம்பரியம் இவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழீழக் கலை – பண்பாட்டுக் கழகம் கிளிநகரில் செயற்பட்டு வந்தது. அதனை கவிஞர் புதுவை இரத்தினதுரை என்பவர் வழிநடத்தியதாக கூறப்படுகின்றது.

சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், நற்றினை, இன்னா நாற்பது இனியவை நாற்பதா எதற்கும் பஞ்சம் இல்லா பழந்தமிழ் இலக்கண இலக்கிய வரலாற்று நூல்கள் செரிந்து கிடைக்கும் வடக்கு நூல் நிலையங்களில்.

இன்று வரை தமிழீழத்தின் தொழில் நுட்பம் சிறப்பாக பேசப்படும் அந்தவகையில் தமிழீழத்தில் வானொலி, தொலைக்காட்சி இவையும் கூட சிறப்பாகத் தொழிற்பட்டன.

தமிழர் மறுவாழ்வு கழகம், மேம்பாட்டுக் கழகம் என்ற பல அமைப்புகள் தமிழர்களின் நல் நல வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் குறைவைக்காமல் பார்த்துக் கொண்டன.

செஞ்சோலை எனும் பெண் குழந்தைகள் காப்பகமும் அறிவுச்சோலை எனும் ஆண் குழந்தைகள் காப்பகங்கள் தொழிற்பட்டு வந்தன. இங்கு வரும் குழந்தைகளின் அகவை பூர்த்திக்கு பின்னர் திருமணச் செலவையும் செய்த துணிவு தமிழீழ அரசிடம் இருந்துள்ளது.

இப்படி சொல்லிக்கொண்டே போகக் கூடிய சிறப்புகளோடு தனித் தாரகையாக திகழ்ந்த இடம். இந்த தமிழீழ ஆட்சியைப் பற்றிக் கூறும் போது யார் பிரபாகரன்? எப்படி ஓர் கட்டுப்பாட்டோடு ஆட்சி நடத்தினார் என்பதும் தெளிவு பிறக்கும்.

இதனைப் பற்றி வடக்கு தமிழர்களும் சரி, தென்னிலங்கை அரசியல் தலைவர்களும் சரி பிரபாகரன் ஓர் உன்னதத் தலைவன் என்றே தெரிவித்து வருகின்றனர்.

அதற்கடுத்து என்ன நடந்தது? தமிழீழத்திற்கு ஏற்பட்ட நிலை என்ன?

அந்த மழலைகள் காப்பகத்தை தாக்கி அழித்தவர்கள் இன்றும் மார்தட்டிக் கொள்கின்றார்கள் “புலிகளைத் தாக்கினோம்” என்று.

ஒடுக்குமுறையை தூக்கித்தின்று தலைநிமிர்ந்து வாழுவோம் என்று கனவு கண்ட பல உள்ளங்களின் கனவு எப்படியோ கலைக்கப்பட்டுப் போனது இதற்கு யார் மீது பழி சுமத்துவது.

தனிச் சிறப்போடு இது தான் எம் வாழ்வு என ஒரு காலத்தில் இருந்த இடம் இன்று குண்டுகளின் பொழிவாலும், சன்னங்களின் சாரலாலும் சிதைந்து விட்டது, திருத்தம் சிதைக்கப்பட்டு போனது.

மழலைக் காத்த செஞ்சோலையும் அறிவுச்சோலையும் சீரழிந்துவிட்டன. விடுதலை தாகத்துடன் அடிமனக் கனவோடு வாழ்ந்த தமிழர்களின் நிலை கேலிக் கூத்தாகப் பார்க்கப்பட்டு, கவலைக்கிடமாக மாற்றப்பட்டது.

பள்ளிகள் மூடப்பட்டன, பணிமனைகள் அழிக்கப்பட்டன, பிள்ளைகள் அனைவருக்கும் பெற்றோரோடு சேர்த்து தஞ்சம் தந்தன கானகங்களும் பதுங்கு குழிகளும்.

இந்த கட்டத்தில் வாழ்வை தமிழீழத்திற்காகவே தியாகம் செய்த போராளிகளுடன் இருப்பதே மேல் என்று வன்னிப் பகுதியில் சுமார் ஐந்து இலட்சம் மக்கள் புலிகளோடு முல்லைக் காட்டுக்குச் சென்றனர்.

பாதுகாப்பு கேள்விக்குறியாகப் போன நேரம், கலங்கி நின்ற தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளோடு, இரசாயன மழையும் பொழிந்தன. இதனால் விளையவில்லை கொத்துக் கொத்தாக விதைக்கப்பட்டுப் போயினர் தமிழர்.

இந்த அழிப்புக்கு பங்காளிப் பல நாடுகள் இருந்தபோதும், இந்தியாவும் பெரும் பங்கு வகித்தது என்பது உண்மை. இன்றைய நிலையில் தமிழ் பெண்கள் மீது வெறித்தனமான பாலியல் கொலைகளை செய்ததும் இந்திய அரசே என்பது பரவி வரும் செய்தி.

காந்தியை நம்பி ஆயுதமே வேண்டாம், அறவழிப்போதும் என்று விடுதலைப்பெற்றுக் கொண்ட இந்திய நாடே இலங்கைக்கு ஆயுதங்களை கொடுத்து உதவி செய்தது. காரணம் அரசியல், பதவியாசை என்றும் சொல்லலாம்.

கோடிக்கணக்காக தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்த போதும், அந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காத இந்திய அரசு அதனையும் தாண்டி.,

தமிழக மீனவர்களும் இலங்கை இராணுவத்தால் கொன்று அழிக்கப்பட்டதனை பெரிதாக அலட்டிக் கொள்ளாத இந்திய அரசு தமிழர்களை அழிக்க துணை செய்தது என்பது மறுக்க முடியாதது. எப்படியோ சிதைக்கப்பட்டுப் போனது அப்போதைய தமிழீழம்.

இங்கு தமிழீழம் சரி, புலிகள் சரி என்பதோ அல்லது மீண்டும் போராளிகள் வர வேண்டும் என்று கூறுவதாக வாதப்பிரதிவாதங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதும் முக்கியம்.

ஜெனிவா முதல் சர்வதேசம் கண்கொத்திப் பாம்பாக போர்க்குற்றம் தொடர்பில் விசாரிப்பதாக வெளித்தோற்றம். ஆனால் உண்மை நிலைப்பாடு போலியா என்ற கேள்வியையும் ஏற்படுத்தி விடுகின்றது.

கேள்வி என்னவெனில் அப்போதைய நிலை இப்போது இருக்கின்றதா? புலிகளை அழிக்கின்றோம் என்ற பெயரின் செய்யப்பட்டது என்ன?

இதற்கு பதில் சட்டென்று கூறிவிட முடியும் ஆனாலும் துணிந்து கூறுபவர்களுக்கு மட்டும் பஞ்சமே. காரணம் ஒன்று தமிழீழத்தை காரணம் காட்டி தனிப்பட்ட அரசியல் இலாப நகர்வுகள் இருப்பதே.

இன்றும் அம் மக்களின் வாழ்வு மட்டும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. புலிகளை அழிக்கின்றோம் என்று தானே யுத்தம் செய்யப்பட்டது நன்று ஆனால் இன்றும் ஏன் தமிழர்களின் வாழ்வு சீர்ப்படுத்தப்பட வில்லை.

அரசியல் இலாபங்களை புறந்தள்ளி விட்டு பார்த்தால் தமிழர்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறும். அப்போது அன்று இருந்த கிளிநொச்சி, தமிழீழ ஆட்சி இல்லா விட்டாலும் கூட.

கிடைத்தது போதும் என்ற மன நிலையோடு சரி மக்கள் திருப்திகரமான வாழ்வை வாழ வைக்க முடியுமா? அதனைச் செய்யப் போவது யார்? எப்போதும் போல இந்தக் கேள்விக்கு மௌனமாக இருக்கலாம். அது ஆயிரம் பதில் சொல்லும்.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் ஒருவரால் வழங்கப்பட்டு 31 Mar 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

-tamilwin.com

TAGS: