அரசிற்கு நெருக்குதல்களை கொடுப்பதாலேயே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியும்: வடமாகாண முதலமைச்சர்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சலில் செட்டியிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச் சபை வட மாகாணத்தில் கடந்த மூன்று தினங்கள் தங்கியிருந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலவரங்கள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.

இந்த விஜயத்தின் நிறைவாக இன்று (05) வடமாகாண முதலமைச்சரை அவரது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து வடமாகாண மக்களின் நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்திருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் போதே மன்னிப்புச் சபையின் தலைவரிடம் முதலமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலில்,

வடமாகாண மக்களின் நிலைமைகள் குறித்த எமது அவதானங்களையும் கேட்டிருந்தார்கள். அரசாங்கம் சரியானதோ, பிழையானதோ, காலம் எடுத்ததோ, எடுக்கவில்லையோ.எனினும் சில குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கின்றன என தமது நிலைப்பாட்டினை சர்வதேசத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் இதுவரை காலமும் செய்தவற்றினை எடுத்துக் கூறியுள்ளார்கள். இனியும் செய்ய வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என நிலைமைகளை எடுத்துரைத்தேன்.

அந்தவகையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சலில் செட்டி இலங்கை அரசாங்கம் தனது கடப்பாட்டில் இருந்து விடுபட முடியாது. கடப்பாட்டில் இருந்து விடுபட்டுச் செல்ல இடமளிக்கமாட்டோம் என்பதும் அவருடைய கருத்து.

ஏதோ ஒரு காரணத்திற்காக பிரேரணையைக் கொண்டு வருகின்றோம் என அரசாங்கம் கூறியதிலிருந்து அந்த பிரேரணையில் இருக்கும் விடயங்களைத் தாங்கள் அவதானித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என கூறியுள்ளார்கள்.

அவற்றினை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருப்பதனால், அவற்றிற்கான அனுசரணைகளை வழங்குவதே தமது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், எம்மால் முடிந்தவரை எமது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி வந்திருக்கின்றோம். அதற்குரிய நிவாரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

வெளிநாட்டவர்களும் வெளிநாட்டு அரசாங்கங்களும், மக்களுடைய உரிமைகளுக்காக போராடும் நிறுவனங்களும், அரசாங்கத்திற்கு போதியளவு நெருக்குதல்களைக் கொடுத்தால் மாத்திரமே மக்களின் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், அரசாங்கம் அவற்றினை நடைமுறைப்படுத்துமெனவும் வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: