இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியான இலங்கைக்கு யாழ்ப்பாணம் பிரதானம். கலைக்கு பெயர் பெற்ற தமிழன், அதற்கும் புகழ் கொடுத்த மண் இந்த யாழ். மண்.
பண்பாடு, கலாச்சாரம்,பாரம்பரியம், பாண்டித்தியம், வீரம், தமிழ்ச் சுவைசொட்டும் இலக்கியங்கள் போன்ற பல்வேறு தனிச்சிறப்பம்சங்களைக் கொண்டு தனித் தாரகையாக திகழ்கின்றது யாழ்.
அந்தச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் சுற்றுலாவிற்கும் மிகப் பொருத்தமான தலம் தான். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் இடம் மாயபிம்பங்களால் பிழையான எண்ணப் போர்வையினால் இப்போது போர்த்தப்பட்டு விட்டது.
எப்படியோ யாழ் பற்றி இப்போது ஓர் பிழையான கண்ணோட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றை புறம் தள்ளி ஒதுக்கி விட்டு சிறப்பு மிக்க யாழின் சில இடங்களை ஆராயும் போது அதன் தனித் தன்மை புலப்படும்.
சங்குப்பிட்டி பாலம். இதுவும் சிறப்பு மிக்க ஓர் இடம். யாழ். கடல் நீரேரிக்கு குறுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சங்குப்பிட்டியை யாழ். மாவட்டத்தில் உள்ள கேரதீவையும் இணைக்கும் ஓர் பாலம் இது.
அடுத்தது நல்லூர் கோயில். யாழ். நகருக்கு நுழையும் யாரையும் அவர் எந்த மதம், என்ன மொழி, எந்த நிறம் என எதனையும் பார்க்காமல் நுழையும் எவருக்கும் சட்டென மனக் கண் முன் வந்து போகும் பெயர் என்றால் அது நல்லூர்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரிய வம்ச சக்கரவர்த்திகளில் ஒருவர் மூலம் இந்தக் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என யாழ்ப்பாண வைபவமாலை நூல் கூறுகின்றது.
அதே போல் யாழை ஆண்ட செண்பகபெருமாள் என்கின்ற புவனேகபாகு எனும் அரசனால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.
கட்டு வித்தது யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் யாழ். மண்ணிற்கு பெருமை சேர்க்கும் பிரதான இடங்களில் ஒன்று இந்த நல்லூர் கந்தன் ஆலயம் என்பது மட்டும் உண்மை.
வருபவர் எவராக இருந்தாலும், அரசனாகட்டும் அது ஆண்டியாகட்டும் மேலாடை களைந்த பின்னரே ஆலயத்திற்கு உள்ளே அனுமதி கொடுப்பார் கந்தன்.
போரினால் புலம் பெயர்ந்துப் போன உறவுகளை ஒன்று திரட்ட வேண்டும் என்றால் அது நல்லூர் திருவிழாவிற்கு மிக மிக எளிது.
எப்படியானாலும், யாழிற்கு பெருமை சேர்ப்பதில் முக்கிய பங்கை தன் வசம் கொண்டுள்ள நல்லூர் உண்மையிலேயே நல்ல ஊர்தான்.
அடுத்த இடம் யாழ். நூலகம். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் வரலாறு அழிக்கப்பட வேண்டும். அப்படி ஓர் முயற்சியில் எரிக்கப்பட்ட யாழ். பொது நூலகம், யாழ் மண்ணிற்கு இன்றும் பெருமை சேர்க்கின்றது.
இன்று இலங்கையில் மறத்துப் போன ஓர் கருப்புப் பக்கத்தை தன்னுள் மறைத்துக் கொண்டு இன்று நவீனமாக்கப்பட்டு கம்பீரமாக காட்சி தருகின்றது யாழ். பொது நூலகம்.
1981ஆம் ஆண்டிற்கு பின்னர் உலகம் முழுதும் பேசப்பட்ட முக்கியமான நூலகம் இது. அது மட்டுமா எத்தனை நிறப்பூச்சி பூசி மறைத்தாலும் இன்று வரை தன்னுள் ஓர் மாற வடுவை மறைத்து நிற்கும் உயிர்க்கட்டம் இந்த நூலகம்.
இலக்கியங்கள் தமிழர் வரலாறு உட்பட பொக்கிஷங்கள் பலவற்றை புத்தகங்களாக பாதுகாத்து வந்த யாழ். நூலகம் வரலாற்றை மாற்றியமைத்தது.
ஆட்சிகள் அதிகாரங்கள் மாற்றம் பெற்று நவீனப்படுத்தப்பட்டாலும் கூட, இந்த நூலகம் தன்னுள் மறைத்து வைத்துள்ள சோகம் தமிழன் ஒவ்வொருவனும் கட்டாயம் அறிவான்.
எரிக்கப்பட்ட விடயத்திற்காக இன்று மன்னிப்பு படலங்கள் கூட வருகின்றன. ஆனால் கல் மேல் அன்று எழுதிய எழுத்துக்கள், நீர் மேல் இன்று எழுதும் மன்னிப்புகள் மூலம் எதுவும் மாற்றம் பெறப் போவதில்லை.
அந்த வகையில் உயிர்க்கட்டமான யாழ். நூலகம் யாழ். நகருக்கு மட்டும் இல்லை வரலாற்றிலேயே முக்கிய இடத்தை பெற்றது.
அதேபோல, யாழ்ப்பாண அருங்காட்சியகம் யாழ்ப்பாணத்திற்கு மிக முக்கியமான ஓர் இடம். இது இலங்கை தொடர்பில் இடம் பெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பொருட்களை சுமந்து நிற்கின்றது.
இங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் வரலாற்றை காட்டுவதாகவும் ஆங்கிலேயேர்களின் ஆக்கிரமிப்புக்களையும் கூட உணர்த்துவதாக காணப்படுகின்றது.
போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண அரசினைக் கைப்பற்றி, யாழ்ப்பாண அரசின் தலைநகராக விளங்கிய நல்லூரை யாழ்ப்பாண நகரத்துக்கு மாற்றியமைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் தமது நிர்வாக செயற்பாடுகளுக்காக யாழ்நகரின் கடற்பரப்பை அண்மித்ததாக யாழ்ப்பாண கோட்டையை அமைத்துகொண்டார்கள்.
அதன் பின்னர் கட்டிட அமைப்பில் மாற்றம் பெற்றது. என்றாலும் சிறப்பு மிக்க இந்தக் கோட்டை தனித்தன்மையுடன் ஜொலித்து வந்தது. ஆனால் இலங்கையில் நடந்த யுத்தத்தில் தப்பிக் கொள்ள வில்லை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணக் கோட்டை இன்றும் யாழ். நகரிற்கு சிறப்புகளைச் சேர்க்கும் ஓர் கோட்டைதான்.
மணிபல்லவம், நாகர்தீவு, நாகதீபம் என பல்வேறு வரலாற்றுப் பெயர்களைக் கொண்ட யாழின் சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவு முக்கியமானதோர் இடம். திராவிடர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் இந்தத் தீவு யாழிற்கு சுற்றுலா வருபவர்களை ஈர்க்கும் ஓர் இடம்.
அதற்கு பிரதான காரணங்களாக நயினை நாகபூசணி அம்மன்ஆலயம், இலங்கைக்குள்ளேயே தரைவழி அற்ற கடல்வழி போக்குவரத்தால் அடையக் கூடிய தீவாகவும் இது அமைந்துள்ளமை போன்றன இதன் சிறப்பு.
அதேபோன்று மத ரீதியில் முக்கியத்துவங்களைக் கொண்ட இடமாக இல்லாவிட்டாலும் கூட அழகிய ஓர் பிரதேசமாக அடையாளப்படுத்தப் படும் நெடுந்தீவு பற்றி மறந்திடல் ஆகாது.
புறாக்கோபுரம், இராட்சத கற்பாதம், ஆண்டு தோரும் வளர்ந்து வரும் வளரும் கல், நூற்றாண்டுகளை விழுங்கி விட்டு நிற்கும் பெருக்குமரம் போன்றன மட்டுமா.,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வந்து விடப்பட்ட கட்டைக் குதிரைகள், நெடுந்தீவு கோட்டை மற்றும் பவளப்பாறைகளால் ஆன மதில்கள் இவையனைத்தையும் கொண்டு நிற்கும் நெடுந்தீவு நெஞ்சத்திலேயே பதிந்து போகும் பார்ப்பவருக்கு.
இவை மட்டும் அல்ல, கசூரினா கடற்கரை அழகிய கடற்கரை யாழ். நகரிற்கு மெம்மேலும் அழகு சேர்க்கின்றது. கந்தரோடையும் கூட யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடியேற்றப் பகுதிகளாக பார்க்கப்படும் இது முக்கியமான ஓர் இடம்.
இந்த இடம் இலங்கையில் நகராக்கம் இடம் பெற்ற மிகப் பழைமையாக இடங்களில் ஒன்றாகவும் கூறப்படுகின்றது.
இவற்றோடு யாழ். மண்ணிற்கு பெருமை சேர்க்கும் மற்றுமோர் இடம் கீரிமலை. உலகின் பிரசித்திபெற்ற 1008 சிவத்தலங்களில் ஒன்றான நகுலேஸ்வரத்தை கொண்டது.
அத்தோடு நோய் தீர்க்கும் வரலாற்று பின்னணியை கொண்ட அறிவியலையும் விஞ்சும் கீரிமலை தீர்த்தத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளமையால் கீரிமலை பிரசித்தம் பெற்று விளங்குகிறது.
தமிழர் வாழ்விடம் என்றால் மர்மம் என்றும் கூறப்படும். அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது நிலாவரைக் கிணறு. தெய்வ நம்பிக்கை கொண்ட இந்த தலமும் யாழிற்கு முக்கியமே.
இப்படியாக சொல்லப்பட்ட விடயங்களை விடவும் பல சிறப்புகள் யாழ். நகர் தன்னகத்தே கொண்டு தனியாக தெரியும் இடம் தான்.
தமிழ்ச் சுவைக்கும், பண்பாட்டுக்கும் பஞ்சம் வைக்காத இந்த யாழ். நாச்சுவைக்கும் குறைவைக்காத இயற்கை சூழல் கொண்டது. ரசனைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் கொண்ட யாழ்ப்பாணம் இன்று எப்படி இருக்கின்றது?
யாழ்ப்பாணம் என்றாலே அச்சமடைய வைக்கும் பிரதேசமாக தோற்றத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தோற்ற மாற்றங்கள் சிந்தைக்கு மட்டுமே. நிஜத்திற்கு அல்ல.
எப்படியும் இது தான் யாழ், இது தான் யாழ். மண்ணின் பெருமை என்று தலை நிமிர்ந்து சொல்லவைக்கும் சிறப்புகள். எதற்கும் இன்றும் யாழ் குறை வைக்கவில்லை.
எப்படியோ வரலாற்று பண்பாட்டு சிறப்பு மிக்க ஓர் நகரை சிதைக்கலாம். அல்லது அதன் சிறப்பை மழுங்கவைத்து விடலாம் என்ற வாய் சொல் வீரர்கள் அதிகார வர்க்கத்தில் இருந்து கொண்டு சில சதுரங்கங்கள் ஆடினாலும்.,
பல வகையிலும் காய் நகர்த்தினாலும் யாழ். மண் பெற்றெடுத்த சிறப்பை அழிப்பதோ, சிதைப்பதோ என்பது நடவாத காரியம் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.
-http://www.tamilwin.com