வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்களை பகிரும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் : ராஜித சேனாரத்ன

rajitha_senarathneவடக்கு, கிழக்கிற்கு விசேட அதிகாரங்களைப் பகிரக்கூடிய வகையில் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு மறுசீரமைப்புக்கு மாத்திரமே நாங்கள் அனுமதிப்போம். புதிய அரசமைப்பொன்று கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் கருத்துகள் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அவ்வாறு கூறிவருவது முட்டாள்தனமாக கருத்தாகும்.

இன்னமும் அரசமைப்புத் தொடர்பான சட்டவரைவு கூடத் தயாரிக்கப்படவில்லை. கட்டாயமாக நாட்டில் புதிய அரசமைப்பொன்று கொண்டு வரப்படும். அதன் அடிப்படையிலேயே அரசு செயற்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு கட்டாயம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் செல்லதான் வேண்டும். அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதென்றால் கட்டாயம் வெற்றிபெறும் வகையிலேயே செல்ல வேண்டும்.

நாட்டில் வாழும் அனைத்து இனங்களின் உரிமைகளையும் அரசியல் அதிகாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அரசமைப்பு அமையும்.

வடக்கு, கிழக்கிற்கு சிறப்பு அதிகாரங்கள் பகிரப்படும். அதேபோன்று நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் அதிகாரம் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

TAGS: