புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இது தருணம் இல்லை என்று அரசியல் அமைப்பு தொடர்பான அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி என்பன தீர்மானித்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன், எம். ஏ.சுமந்திரன், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம,
நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிசாத் பதியுதீன் மற்றும் ராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா ஆகியோருக்கு இடையில் அண்மையில் சந்தித்து பேசியுள்ளனர்.
இவர்களின் இச் சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த சந்திப்பு இடம்பெற்ற திகதி எது என்று அரசாங்க பத்திரிகை வெளியிடவில்லை.
இதேவேளை, இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மனந்திறந்து தமது கருத்துக்களை முன்வைத்ததாக எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் அவசியம் குறித்து அவர் இதன்போது வலியுறுத்தியபோதும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அதற்கான தருணம் இதுவல்ல என்றும் முழுமைப்படுத்தப்பட்ட வரைபு ஒன்றை தயாரித்து அதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கலாம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர் என்று இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆதிகார பரவலாக்கம் என்ற விடயத்திற்காக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைந்தளவிலாவது வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் என்பன வலியுறுத்தின.
எனினும் நாட்டு மக்களுக்கு தாம் வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்பட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அரசியலமைப்பு மீளமைப்பு வரைபை அரசியல் அமைப்பு பேரவையிடம் முன்வைப்பது என்று வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.
எனினும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கவேண்டுமா? அல்லது அரசியல் அமைப்பு மீள்திருத்தமா? அவசியம் என்பதை அரசியல் அமைப்பு பேரவை பின்னர் தீர்மானிக்கும் என்று வழிநடத்தல் குழு தெரிவித்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.