தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது!

swaminathanசிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை புத்தாண்டை முன்னிட்டோ அல்லது வேறு காரணங்களின் அடிப்படையிலோ உடனடியாக விடுதலை செய்ய முடியாது என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் பனம் உற்பத்தியாளர்களுக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ். மத்திய கல்லூரியில் நடை பெற்றது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வெளியேறுகையில், அரசியல் கைதிகள் தொடர்பாக ஊடகவிய லாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் அனைத்து விபரங்களும் என்னிடம் உள்ளது. கைதிகளின் விபரங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் சட்டரீதியான ஏற்பாடுகள் பல உள்ளது. எல்லா கைதிகளும் நீதிமன்றில் மனு அளித்துள்ளார்கள்.

மிக விரைவாக அவர்களின் வழக்குகளை செய்து முடிப்பதற்கு விசேட நீதிமன்றம் துணை செய்துள்ளது.

எனினும் வருகின்ற புத்தாண்டை முன்னிட்டோ அல்லது வேறு காரணங்களின் அடிப்படையிலோ உடனடியாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது.

சட்ட அலுவல்கள் பூர்த்தியாகிய பின்னர் தான் படிப்படியாக விடுவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

– Valampuri

TAGS: