வட மாகாண சபையினால் எமது எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகாத நிலை! கணேஸ்வரன் வேலாயுதம்

northern_provincial_councilஎங்கள் போராட்டத்தின் மூலமாகவே வடமாகாண சபை எமக்குக் கிடைத்துள்ளது. ஆனால், அந்த வடமாகாண சபையூடாக நாம் எமது எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை சார் உற்பத்திப் பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பும், நூல் வெளியீட்டு விழாவும் நேற்றுப் முற்பகல் மேற்படி சபையின் தலைவர் வைத்தியகலாநிதி இ. சிவசங்கர் தலைமையில் யாழ். மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களாகிய நாங்கள் சுமார்-30 வருட காலமாக அகிம்சைப் போராட்டம் மேற்கொண்டோம். முப்பது வருட காலமாக ஆயுதப் போராட்டம் மேற்கொண்டோம். இந்த இரண்டு போராட்டங்களிலும் நாம் வெற்றி பெறவில்லை.

நாங்கள் ஒரு வெற்றி இலக்கை அடைய வேண்டுமானால் எமது போராட்ட வடிவம் மாற்றப்பட வேண்டும். கல்வியால் மாத்திரம் தான் எங்கள் மக்களை முன்னேற்ற முடியும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜப்பான், ஜேர்மன் போன்ற நாடுகள் தாக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்ட போதும் அந்த இருநாட்டு மக்களும் கல்வியாலும், தங்கள் உழைப்பாலும் சாதித்துக் காட்டினார்கள். சிறிது காலத்திலேயே அந்த அழிவிலிருந்து மீண்டார்கள்.

கடந்த-2012 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வடமாகாணம் கல்வியில் இறுதி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் பாடசாலைக் கல்வியைத் தொடரும் ஐந்தில் ஒரு மாணவனுக்கு முற்றாக எழுதப்படிக்கத் தெரியாது.

மலையகத்தைப் பொறுத்தவரை இருபதில் ஒரு மாணவனுக்குத் தான் எழுதப் படிக்கத் தெரியாது. பிள்ளைகளுக்கு எழுதப் படிக்கத் தெரியாததற்கு அந்தப் பிள்ளைகள் காரணமல்ல. நாங்கள் தான் காரணம்.

வடமாகாணத்தில் 300 ஆசிரியர்கள் மனநோய்க்குள்ளாகியுள்ளனர். அவர்கள் பாடசாலை சென்று கல்வி போதிப்பதில்லை. ஆகவே, இவ்வாறான மன நோயாளிகளான ஆசிரியர்களுக்கு ஓய்வு வழங்குவதே நல்லது.

நான் பூநகரியிலுள்ள பாடசாலையொன்றுக்குச் சென்றிருந்தேன். அந்தப் பாடசாலையில் ஒரு பிள்ளை 8 ஏ பெற்றுச் சித்தி பெற்றுள்ளது.

ஆங்கில பாடத்தில் மாத்திரம் சித்தியடையவில்லை. கடந்த காலங்களில் அந்தப் பாடசாலையில் ஆங்கில பாடத்திற்கென ஆசிரியரில்லாமையே இதற்கான காரணம்.

அது மாத்திரமல்லாமல் அதே பாடசாலையில் தற்போது நான்கு ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுகிறது. கணிதத்திற்கு அந்தப் பாடசாலையில் ஆசிரியரே இல்லை.

இந்த நிலையில் இந்த வருடம் இடம்பெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அந்தப் பாடசாலையில் யாருமே சித்தியடையப் போவதில்லை.

ஆகவே, தவறு யார் பக்கமிருக்கிறது என்பது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். இதற்கெல்லாம் ஒரு சரியான தீர்வு காணாவிடில் எங்களுடைய சமுதாயம் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்லப் போகிறது.

வலிகாமத்திலே எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் கல்வி கற்ற பாடசாலையொன்றுக்குச் சென்றிருந்தேன். அந்தப் பாடசாலையிலுள்ள ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் 120 மாணவர்களில் 30 மாணவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

இவ்வாறான சூழலில் ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என நாம் தட்டிக் கேட்கிறோமா?

சில ஆசிரியர்கள் தமக்குச் சுகமில்லை என லீவு எடுத்து விட்டுத் தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்வி போதிக்கிறார்கள். இவ்வாறான நிலைமைகள் தொடர நாம் இடமளிக்கக் கூடாது.

எங்கள் போராட்டத்தின் மூலமாகவே வடமாகாண சபை எமக்குக் கிடைத்துள்ளது. ஆனால், அந்த வடமாகாண சபையூடாக நாம் எமது எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. இது மிகவும் மன வருத்தத்திற்குரியதொரு விடயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: