உலகம் கடந்து வந்த பாதையில் பல்வேறு இன அழிப்புகள் அரங்கேற்றப்பட்டு கொண்டு வந்தன. அவற்றின் நோக்கம் அதிகார வெறி மட்டுமே.
ஆனால் இன அழிப்புகளுக்கு தீர்வுகளும் தீர்ப்புகளும் கிடைத்ததா என்றால் அது சிந்திக்கப்பட வேண்டிய விடயம். காலப்போக்கில் மேல் வடுக்கள் போல, குற்றங்களும் மறைந்து விடும் அல்லது மறைக்கப்பட்டு போகும்.
இலங்கை உள்நாட்டுப் போர், போர்க் குற்றங்களும் கூட இதற்குள் அடக்கி விடக் கூடிய ஒன்று என்ற வகையிலும் நோக்க முடியும்.
ஜ. நா பிரதிநிதிகள் கூட “ஏனைய யுத்தங்களை வேடிக்கைப் பார்த்தது போல இலங்கை யுத்தமும் வேடிக்கை பார்க்கப்பட்டது” என எல்லாம் முடிந்த பின்னர் தெரிவித்திருந்தனர்.
இது இன்று நேற்று நடை பெறும் ஒன்றா? காலச் சக்கரத்தை பின்னோக்கி நகர்த்திப் பார்த்தால் ஓர் மறைக்கப்பட்ட இன அழிப்பு தெரியும். இது நடைபெற்றது தென் ஆபிரிக்காவின் ஒரு பகுதியில்.
ஹேரேரோ இன அழிப்பு என்பது வரலாற்றில் மறைக்கப்பட்ட ஓர் கறுப்புப் பக்கம். தென் ஆபிரிக்காவில் நபிபீயா நாட்டில் வாழ்ந்து வந்தனர் ஹேரேரோ எனப்படும் ஓர் சமூத்தினர்.
இவர்களின் வாழ்ந்த பகுதியின் சிறப்புத் தன்மை விஷேட உலோகங்களும், வைரங்களும் வெகுவாக கிடைக்கும் ஓர் பகுதியே அந்தப் பிரதேசம்.
அந்த சிறப்பை அறிந்தனர் ஜெர்மனியர்கள். அத்தோடு அதனை அபகரிக்கவும் நினைத்தனர். அதற்காக 1880களில் ஆக்கிரமிப்பு படலத்தை மேற்கொண்டனர்.
ஆனாலும் ஹேரேரோ மக்கள் அத்தனை கோழைகள் அல்ல எதிர்த்தனர். ஜெர்மனியப் படைகள் தோல்வியைச் சந்தித்தன.
அதன் பின்னர் மீண்டும் 10000 வீரர்களை லொதர் வோன் ட்ரோதா எனும் படைத்தளபதியுடன் அனுப்பி வைத்தது ஜெர்மன்.
போர் மூலம் அவர்களை அழிக்க முடியாது என்பதனை தெளிவாக அறிந்து கொண்ட ஜெர்மன் படைகள், ஹேரேரோ மக்களின் வாழ்வாதார அடிப்படையில் கை வைத்தது.
ஹேரேரோ மக்கள் வாழ்ந்த பகுதிக்கு நீர் வளம் கிடைப்பது மூன்று பகுதிகளில், அடுத்த பகுதி பாலைவனம் இதனை அறிந்த ஜெர்மன் படைகள் நீரில் விஷத்தை கலந்தன.
பாதிக்கப்பட்ட ஹேரேரோ மக்கள் பாலைவனத்தை தாண்டிச் சென்று நீரைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் பாலைவனத்தை நோக்கி செல்பவர்கள் சுடப்பட்டார்கள்.
இப்படியான இன அழிப்பு படலத்தில் குறுகிய காலப்பகுதியில் சுமார் 85000 மக்கள் வாழ்ந்த பகுதி 10000 வரையிலும் குறைந்து போக மீதமான ஹேரேரோ மக்கள் ஜெர்மன் படையினரால் அடிமைகளாக மாற்றப்பட்டனர்.
இப்படியாக திட்டமிட்டு சுமார் 1 இலட்சம் மக்கள் அழிக்கப்பட்டனர் இது வரலாறு மறைத்த இன அழிப்புகளில் ஒன்று.
இந்த இனஅழிப்பு கொலைகள் தொடர்பில் எந்த விதமான சர்வதேச விசாரணைகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அப்படியே மறைக்கப்பட்டு மறந்து போனது உலகம்.
இப்படியான நிலைமை ஏற்படக் காரணம் என்ன? அதிகாரங்கள் கைவசம் இருக்கும் போது எத்தகைய குற்றங்களும் மறைத்து விட முடியும் என்பதா?
இந்த நிலை இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. முடிந்துபோன இலங்கை யுத்தமாக இருக்கட்டும், இப்போது தொடர்ந்து கொண்டு இருக்கும் சிரியா யுத்தமாக இருக்கட்டும் அனைத்தும் வேடிக்கை பார்க்கப்படுகின்றது.
இவற்றில் சர்வதேச தலையீடுகள் என்பனவும் குறைவு காரணம் அதிகாரம். அப்படி என்றால் மனித உரிமை அமைப்புகள், சர்வதேச விசாரணை அமைப்புகள் போன்றன யாருக்காக செயற்படுகின்றன?
அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி என்ற வகையில் அவை செயற்பட்டு கொண்டு வருகின்றது. என்றால் ஒட்டு மொத்த உலக மக்களும் ஏமாற்றப்படுகின்றார்களா?
-tamilwin.com