விடுதலைப் புலிகள் பொறுப்பிலும் போரின் போது வீடுகளில் கைவிட்டு சென்ற நிலையில், மீட்கப்பட்ட சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய ஆபரணங்களை மீண்டும் கையளிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளது என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சகல தரப்பினருடனுடன் கலந்துரையாட உள்ளதாகவும் இந்த கலந்துரையாடலை அடுத்த வாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் உதவி பாதுகாப்புச் செயலாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரியிருந்த தகவல்கள் தொடர்பில் பதிலளித்துள்ள இலங்கை மத்திய வங்கி, இராணுவம் வழங்கிய 37.7 கிலோ தங்கம் தம்வசம் இருப்பதாக கூறியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி வரையான காலத்தில் இராணுவம் வழங்கிய தங்க ஆபரணங்கள் அடங்கிய பொதிகளை பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் ரூபா எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.
தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தங்க ஆபரணங்களின் எடை மற்றும் பெறுமதியை மதிப்பீடுசெய்துள்ளது.
தங்க பொதிகளை பொறுபேற்கும் போது ஒரு இராணுவ அதிகாரி மற்றும் மத்திய வங்கியின் கண்காய்வாளர் முன்னிலையில் அவற்றை பெற்றுக்கொண்டதுடன் இராணுவத்திடம் தங்கத்தை பெற்றுக்கொண்டமைக்கான பற்றுச்சீட்டை வழங்கியதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இராணுவம் கையளித்த 6003.132 கிராம் எடை கொண்ட தங்க ஆபரண பொதியின் பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் மத்திய வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது.

























