இந்தியாவுக்காகவே விடுதலைப் புலிகளுடன் போரிட்டேன் : மனம் திறந்தார் மஹிந்த

10Mahinda-Rajapakse-lதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியாவே உதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனை ஒருபோதும் பகிரங்கப்படுத்தியது கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 30 ஆண்டுகாலமாக நீடித்த யுத்தத்தை உங்களது அரசாங்கமே முடிவுக்கு கொண்டு வந்தது.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இராணுவ ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

எனினும், இந்தியாவிடம் இருந்து எந்த உதவிகளையும் கேட்கவில்லை. இதன் போது இந்தியாவின் நிலைப்பாடு எப்படியிருந்தது” என கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய மஹிந்த ராஜபக்ச, “இந்தியா உதவிகள் எதும் கேட்கவில்லை. ஆனாலும் அதிக உதவிகளை இந்தியா வழங்கியிருந்தது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் எங்களுக்கானது மட்டுமல்ல. அது இந்தியாவுக்குமானது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி உள்ளிட்ட இந்திய மக்கள் உங்கள் மண்ணில் வைத்தே விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டனர்.

ஆகையினால் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இந்தியாவுக்குமானது. விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா எங்களுக்கு உதவிகளை வழங்கியது. இந்தியாவுக்காகவே விடுதலைப் புலிகளுடன் போரிட்டேன்.

ஆனால் அதனை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. யுத்தத்தின் போது சீனா, பாகிஸ்தான் மட்டும் உதவி செய்யவில்லை. பிரித்தானியா மற்றும் அமெரிக்காவும் உதவி செய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

TAGS: