மயிலிட்டியில் ஆயுதக்கிடங்கு? இராணுவத்தளபதியுடன் கூட்டமைப்பினர் வாக்குவாதம்

tna_colombo_1மயிலிட்டியில் ஆயுதக்கிடங்கு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் போலியான தகவல் என இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகத்தை பொது மக்களின் பாவனைக்கு கையளிக்க மறுப்பு தெரிவிப்பது குறித்து கடற்படையினரிடம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய கடற்படையின் தேசிய திட்டமிடல் பணிப்பாளர் குருகுலசூரிய “அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை” என குறிப்பிட்டிருந்தார். எனினும், கூட்டமைபினர்கள் அவரின் பதிலை ஏற்கவில்லை.

மேலும், மயிலிட்டி பகுதியில் ஆயுத கிடங்கு இருப்பதாகவும், அதனை மாற்றவேண்டியுள்ளதனால் குறித்த பகுதியை விடுவிக்க காலம் தாமதிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றதே என கூட்டமைப்பினர் மீண்டும் கேள்வியெழுப்பினர்.

இதனையடுத்து பதிலளித்து பேசிய இராணுவத்தளபதி, “அவ்வாறு கூறப்படுவது பொய்யான கதையாகும்” என குறிப்பிட்டார். எனினும், இராணுவத்தளபதியின் கருத்திற்கும் கூட்டமைப்பினர் மறுப்பு வெளியிட்டனர்.

எவ்வாறாயினும், அது உண்மையான தகவல் என கூட்டமைப்பினர் மீண்டும் வலியுறுத்த, மறுபடியும் இராணுவத்தளபதி மறுப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் குறுக்கிட்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்விப்பட்ட தகவலையே அவர்கள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டு பிரச்சினையை முடிவுக்குகொண்டுவந்துள்ளார்.

-tamilwin.com

TAGS: