வன்னிக்கிராமங்களில் ஒன்றான பாவற்குளம் மண்தான் சுவேந்திரன் என்ற ஜெயம் அண்ணாவைப் பெற்ற தாய்மடி. பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் தொடந்து வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தார். காலம் சுவேந்திரனை புலியாக்கியது. இந்தியாவில் 3வது பயிற்சிப்பாசறை போராளியாய் புடம்போட்டு, வளர்த்துத் தாயகம் அனுப்பியது. இந்தியாவிலிருந்து பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய ஜெயமண்ணா புதிய போராளிகளை உருவாக்கும் பொறுப்பில் பணியை ஆரம்பித்தார். துணுக்காய் தென்னியங்குளம் பயிற்சி முகாமின் பயிற்சியாசிரியராகினார். இங்கிருந்தே வன்னிக்கான பணிகளுக்கான அணிகள் பிரித்து அனுப்பப்பட்டது. இங்கிருந்தே ஜெயமண்ணா வவுனியா மாவட்ட பணிக்காக போராளிகளோடு அனுப்பப்பட்டிருந்தார்.
ஆரம்பகால சண்டைகளான கொக்குளாய் தாக்குதல் அணியில் ஒரு அணியோடு களம் சென்றது மட்டுமன்றி பூனகரி 4ம் கட்டைச் சண்டை , ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் என பல சண்டைகளிலும் பங்கேற்றிருந்தார். ஆரம்ப காலம் மிகவும் சிரமங்களைச் சந்தித்த கடுமையான சண்டையனுபவங்கள். பின்னர் பெரும் தளபதியாய் நிமிரும் வரையான ஜெயமண்ணாவின் ஆற்றலின் அடையாளங்களும் சாதனைகளும் கால நதியோடு தானும் கைகோர்த்துக் கொண்டே நடந்தது. 1987 யாழ்மாவட்டம் மிகுந்த சிக்கலை எதிர் நோக்கியிருந்த காலமது.
‘லிபரேசன் ஒபரேசன்’ நடவடிக்கை மூலம் வடமராட்சியின் பெரும் நிலப்பரப்பு இலங்கையரச படைகள் வசமானது. யாழ்மண்ணின் இதர பகுதிகளும் சிங்களத்தின் கைகளில் போய்விடும் என்ற நிலமையைத் தோற்றுவித்து மக்களின் மனங்களில் யுத்தத்தின் பாதிப்பு உள ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் காலம் யாழ்மண் உணவு தொடக்கம் மருந்துகள் அடிப்படைத் தேவைகளுக்கெல்லாம் மிகவும் அவதிப்பட்டகாலம்.
அயல் நாடான இந்தியா தனது பிராந்திய நலனில் எப்போதுமே அடுத்த நாடுகளையோ அல்லது அயல்நாடுகளையோ அண்டவிடாதது. இக்காலத்தில் இந்தியா திடீரென யாழ்மாவட்டத்தின் பல பகுதிகளில் வானிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
காப்பதற்கு இந்தியா கட்டாயம் வருமென்று நம்பிய தமிழர்களின் நம்பிக்கைக்கு உற்சாகத்தை வழங்கியது போல 04.06.1987 இந்திய விமானங்கள் போட்ட உணவுப்பொதியில் ஈழத்தமிழரின் விடிவின் காலமும் நெருங்கியதாகவே உணர்ந்தது தேசம். புலிகள் மட்டும் இந்திய அரசின் போலி இரக்கத்தைப் புரிந்து கொண்டார்கள். 05.07.1987 அன்று வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது உயிராயுதமாக மில்லர் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் உட்சென்று வெடித்து பெரும் அழிவை இராணுவப் படைகளுக்கும் அரசுக்கும் ஏற்படுத்திய பேரிடியில் சிங்களத்தின் மனபலமும் உடைந்து போனது.
அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கனவை உடைத்து கரும்புலியின் வரலாற்றை எழுதிய முதல் கரும்புலி வீரன் கப்டன்.மில்லரின் அந்தத் தாக்குதலோடு அதுவரை திமிரோடு ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட இராணுவ வல்லமையின் ஆணவமும் அடங்கிப்போனது. புலிகளின் வரலாற்றில் குறைந்த இழப்பின் மூலம் எதிரி மீதான பெரும் அழிவைக் கொடுக்கும் உயிராயுதங்களின் திறனை ஆடி 5, 1987 உலகிற்கும் சிங்களத்திற்கும் உணர்த்தியிருந்தது. இனி போர் மூலம் வெற்றியைப் பெற முடியாத உண்மையை ஜனாதிபி ஜே.ஆர்.ஜெயவர்த்தன உணர்ந்து கொண்டார்.
87களில் வன்னி மாவட்டத்தின் பொறுப்பாளராயிருந்த ஜெயமண்ணாவின் பணிகளானது மிகவும் முக்கியம் வாய்ந்தது. போராளிகள் மக்களுடன் மக்களாக கிராமங்களில் விழித்திருந்த காலங்கள். அக்காலத்தில் காட்டில் தலைவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த போராளிகள் தளபதிகளுடன் தளபதி ஜெயமண்ணாவும் தலைவனைக் காக்கும் பணியில் நியமனம் பெற்று தலைவனின் அருகில் தனது பணிகளைத் தொடர்ந்தார். புதிய போராளிகளை உருவாக்குதல் தொடக்கம் அந்தக்கால இறுக்கத்திற்கு ஏற்ப திட்டமிடல் பணிகளை விரிவுபடுத்தல் செயற்படுத்தல் என ஓய்வு மறந்து இயங்கிக் கொண்டிருந்த போராளி. பல சண்டைகளில் தனது ஆழுமையை சாதுரியத்தை வெளிப்படுத்திய சத்தமில்லாத சாதனையாளன். இயல்பிலே அமைந்த தனித்துவப் பண்புகள் மக்களின் மனங்களை வென்ற தளபதியாக இனங்காட்டியது.
1990இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்து புலிகளின் போரியல் வீச்சும் மாற்றம் கண்ட காலம். 90இற்குப் பின்னர் தலைவரின் பாதுகாப்பணியில் செயற்படத் தொடங்கினார். தலைவனின் நம்பிக்கை , தலைவனின் பாதுகாப்பு , போராளிகளின் அன்பையெல்லாம் பெற்றிருந்த போராளியின் தியாகத்திற்குச் சவாலாக 1993காலப்பகுதி அமைந்தது. ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் கலங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே” என்ற பாடலை சக தோழர்களுக்கு எழுதிக்காட்டி தைரியம் கொடுத்து நடந்து முடிந்த எல்லாத்துயரையும் தலைவனை நினைத்தபடியே வென்றார்.
புலிகளின் போராட்ட வரலாற்றில் ஜெயசிக்குறு சமரானது புதிய வடிவத்தில் நடைபெற்ற சமராக வரலாற்றில் பதிவாகியது. இப்பெரும் சமரில் களமுனைத்தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயமண்ணாவின் படையணிகளின் பங்கானது அந்தச் சமரின் வெற்றியில் கணிசமான பங்கை வழங்கியது. அடுத்து புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட கிளிநொச்சி முகாம் அழிப்பு நடவடிக்கையில் திருவையாறு பகுதியால் சென்ற அணியின் தளபதியாக ஜெயமண்ணாவும் அவரது படையணியும் சென்றிருந்தது. புலிகளினால் வெல்லப்பட்ட கிளிநொச்சி வெற்றியில் ஜெயமண்ணாவும் அவரது படையணியும் தங்களுக்கான கடமையை முடித்தார்கள். மீண்டது கிளிநொச்சி.
எப்போதுமே தனக்கு வழங்கப்படும் பணியை நேர்த்தியுடன் செய்து முடிக்கும் தளபதியாகவே ஜெயமண்ணா வெற்றி தந்த சமரான கிளிநொச்சி மீட்பிலும் பங்காற்றியிருந்தார்.அடுத்து வீழ்ந்தது ஆனையிறவு முகாம். எத்தனையோ இழப்புகளை 1991இல் இருந்து ஆனையிறவு மீட்புக்காக இழந்ததற்கான பலன் 2000ம் ஆண்டு புலிகளால் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டது. உப்பளக்காற்றில் வாசனையில் ஜெயமண்ணாவின் பணிகளும் கலந்தேயிருந்தது. ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்மண்நோக்கிய புலிகளின் பாச்சலிலும் ஜெயமண்ணாவின் தடங்களும் அந்த வெற்றியில் பதிந்திருந்தது. 2001இல் நடைபெற்ற தீச்சுவாலை நடவடிக்கையிலும் ஜெயம் என்ற ஆழுமையும் ஆற்றலும் தனது கடமையில் பின்செல்லாமல் முன்னேறிச் சென்ற சாதனையாளன்.
சமாதான கால கட்டத்தில் பல வெளிநாடுகள் சென்று வந்தார் ஜெயம் அண்ணா. அவர் அங்கேயே தங்கி இருக்கலாம். அவர் அப்படிச் செய்யவில்லை. வெளிநாட்டு வாழ்வையும் பணபலத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையெல்லாம் பெற்றிருந்தும் கடைசிவரை தலைவனுடன் தலைவனின் பாதையில் சென்று முடியும் நினைவோடே இறுதிக்காலம் கணவன் மனைவி இருவருமே களத்தில் நின்றார்கள். போராடினார்கள். 2006 தொடக்கம் 2007 4ம் மாதம் வரையிலும் கிழக்கு மாகாணத்தில் நின்று அந்தக் களங்களை வழிநடத்திய ஆற்றலின் வடிவம். எப்போதுமே சுயநலமற்ற தேசக்காதலை மட்டுமே நெஞ்சில் சுமந்து வாழ்ந்த எளிமையின் பெருமையெல்லாம் ஜெயமண்ணாவின் போராட்ட வாழ்வின் வித்தியாசமான சாட்சிகள்.
கடைசிச் சாட்சியங்களும் அழியவிருந்த 2009மே மாதம் 18ம் திகதி வரையும் களமாடிய வீரன். கையுயர்த்திச் சாவடையும் நிலமையை வெறுத்துக் கடைசிச் சொட்டு உயிருள்ள வரையும் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்த மக்களின் நினைவோடும் அந்த மண்ணின் கனவோடும் தங்கள் இறுதி மூச்சையும் இலட்சியக்கனவையும் சுமந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கணவன் மனைவி இருவரும் சுடுகலன்களோடே காவலிருந்தார்கள்.
வெளிநாடுகளில் இருந்த நண்பர்கள் ஜெயமண்ணாவின் துணைவி நளாக்காவை பிள்ளைகளுடன் வெளியே வருமாறு வேண்டினர். கோல்சர் கட்டீட்டன்….பிள்ளைகளை நீங்கள் பாப்பியள் தானே…எனச் சொல்லிவிட்டு குழந்தைகள் சிந்துசை , அகரன் இருவரையும் கூட மறந்து இறுதி வரை போராடுவோம் என உறுதியோடு நின்ற அந்த வித்தியாசமான தம்பதிகள் இருவரையும் நினைவு கொள்ளும் நண்பர்களிடம் அவர்களது தேசம் மீதான காதலும் தேசியத்தலைவர் மீதான அன்பையும் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகளும் கனவுகளும் நிறைந்து கிடக்கிறது.
தளபதி ஜெயம் அவர்கள் நோர்வே நாட்டுக்கு வந்தவேளை, அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டி இருந்தது. அவரை பின்னர் ஈழத்தில் சந்தித்து பழகும் வாய்ப்பும் ஏற்பட்டிருந்தது. எப்படியான ஒரு மனம் கொண்டவர் என்பதனை வார்தைகளால் விவரிக்க முடியாது.
அதிர்வுக்காக,
கண்ணன்
-athirvu.com