புதிய அரசமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு, யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது எனப் புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில வாரங்களாக இளைஞர் அமைப்புகளுக்கு புதிய அரசமைப்புத் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இது தொடர்பில் தெளிபடுத்தப்பட்டது. தற்போது பொதுமக்களுக்குக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 12 மாவட்டங்களில் பொதுமக்களுக்கு புதிய அரசமைப்பின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களின் அரச உத்தியோகத்தர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தல் நாளை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் தொடர்ச்சியாக புதிய அரசமைப்புத் தொடர்பில் அரசியல் நிர்ணய சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.