அரசிற்கு நெருக்கடி கொடுத்தால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் பதவிக்கு வந்து விடுவார்கள்

இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 62ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாங்கள் அரசாங்கம் அல்ல அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மக்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்திற்கு வாக்களித்தோம்.

ஆனால் அந்த விடயங்கள் எவையும் நடைப்பெறவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் அது நல்லாட்சி அரசாக இருக்க முடியாது.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் இனியும் இடம்பெற கூடாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வு ஒன்றை பெற்றுத்தர முயற்சி செய்கிறேன்.

இரண்டு அல்லது மூன்றாம் திகதிகளில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பல பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளேன். அதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவேன்.

இவ்வளவு காலமும் சர்வதேச சமூகமும் கடந்த கால அரசாங்கங்களுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் போதிய அழுத்தத்தை கொடுக்கவில்லை.

எனவே இனி நாங்களும் சேர்ந்து அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகத்தை கொண்டு போதிய அழுத்தத்தை கொடுத்து பிரச்சினைகளுக்குரிய தீர்வை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

மேற்குல நாடுகள் இந்த அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று எங்களோடும் பேச்சுவார்த்தை நடத்திதான் அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கினார்கள்.

யார் இந்த ஐ.நா தீர்மானத்திற்கு அடிப்படையாக இருந்தார்களோ. அவர்கள் தான் இந்த அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்க வேண்டும். சட்டரீதியாகவோ அல்லது அவர்களின் செல்வாக்கின் அடிப்படையிலோ அதனை மேற்கொள்ளவார்கள். அதற்காக தான் நாங்களும் இந்த தீர்மானத்திற்கு உடன்பட்டோம் எனத் தெரிவித்தார்.

மாறாக சர்வதேச சமூகத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று சொன்னால் நாங்கள் அவர்களிடமிருந்து தனிமைபட்டு விடுவோம்.

நாங்கள் ஒரு அரசியல் கட்சி, நாடு அல்ல. ஆகவே இதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தோடு சேர்ந்து நாங்களும் ஒன்றாக பயணித்தால் தான் இந்த அரசாங்கம் எங்களை கைவிட்டாலும் சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது.

எனவே நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். எனவே தான் நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணங்கி நிற்க விரும்புகின்றோம்.

இதில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் வேறுப்பட்டு நிற்பதாகவே அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளில் அக்கறையின்றி இருப்பதாகவோ நான் நினைக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒருமித்து தான் விடயங்களை செய்கிறோம்.

ஐரோப்பிய சமூகம் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் வந்து சந்தித்த போதும் கூட நாங்கள் ஒருமித்தே கருத்துக்களை கூறியிருந்தோம்.

சம்பந்தன் மிகத்தெளிவாக கூறியதற்கு அமைவாக நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் ஜெனீவா தீர்மானத்திற்கு உடன்பட்டிருந்தோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

-tamilwin.com
TAGS: