வடக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டாயம் விஜயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ளநாட்டு யுத்தம் நிறைவடைந்த போதிலும் தமிழர்களுக்கு அவர்களின் சொந்த நிலங்கள் தற்போது வரையில் கிடைக்கப் பெறவில்லை.
எனவே,இந்த பிரச்சினைகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து சனிக்கிழமை இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பழ.நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ தமிழ் மக்களின் பகுதிகளை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த நிலை தொடர்ந்துக் கொண்டே செல்கின்றது.
எனவே யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் தமிழர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துக் கொள்ள மோடி,யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் என பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்.விஜயம் மேற்கொண்டப் போது தமிழர்களின் விபரம் அம்பலமானது, எனவே இது போல் மோடியும் செல்ல வேண்டும் என பழ.நெடுமாறன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் பண்டிகையில் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com