படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட கூடாது! கிளிநொச்சியில் பாரிய போராட்டம்

வடக்கில் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க வேண்டாம் என வலியுறுத்தி கிளிநொச்சியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணிவிடுவிப்பு தொடர்பில் கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது படையினரினரால் நிர்வகிக்கப்படும் பண்ணை காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பண்ணை காணிகளை விடுவிக்க வேண்டாம் என வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளை வடக்கு மாகாணசபையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதேவேளை, பண்ணைக் காணிகள் விடுவிக்கப்பட்டால் தமக்கான வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தமது எதிர்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

-tamilwin.com

TAGS: