லண்டன் மீதான மோகம்! முகவரை நம்பி உயிரை பறிகொடுத்த ஈழத்து இளைஞர்கள்

சட்ட விரோதமான முறையில் லண்டன் செல்ல முற்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈரான் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் செம்மலை மற்றும் உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். லண்டனில் தொழில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் முகவர் ஒருவரின் ஊடாக குறித்த இருவரும் சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு உப்புக்குளத்தில் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான பேரம்பலம் மைதிலிபாலன் மற்றும் முல்லைத்தீவு செம்மலையைச் சேர்ந்த 23 வயதான விஜயகுமார் பிரசாத் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி லண்டன் நோக்கி குறித்த இரு இளைஞர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதே மாதம் 19ஆம் திகதி குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர்.

இதில், “தாங்கள் ஈரான் நாட்டில் இருப்பதாகவும், அங்கிருந்து வேறு நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும்” தங்களுக்கு தகவல் வழங்கியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், 19ஆம் திகதிக்கு பின்னர் தங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வெளிநாட்டு தூதரகத்தை தொடர்புகொண்டு குடும்பத்தினர் விபரமறிந்துள்ளனர்.

இதன் போது ஈரான் எல்லையை கடக்க முற்பட்ட இரண்டு இளைஞர்கள் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவர்களின் புகைப்படங்களை காண்பித்துள்ளனர். குறித்த புகைப்படம் சரியாக அடையாளம் காட்டக்கூடிய வகையில் இருக்கவில்லை.

இதனையடுத்து, வீட்டில் உள்ள குறித்த இருவரின் புகைப்படங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்த்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தது மேற்படி இரு இளைஞர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 -tamilwin.com
TAGS: