தெருக்களில் இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் பதில் கூறாமல் இருப்பதை ஏற்க முடியாது! மாவை

mavai-senathirajahதெருக்களிலும், வெயிலிலும் இருக்கும் மக்களுக்கு பதில் கூறாமல் அரசாங்கம் இருப்பதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நூளை மறுதினம் (27) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு எதிராக போராடிவரும் தாய்மார்கள் வடகிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடகிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மறுதினம் 27 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான ஆதரவினை வழங்குகின்றது.

போர்க்காலத்திலும், போர் முடிந்த காலத்திலும், இராணுவத்தில் சரணடைந்தவர்கள் மற்றும் உறவினர்களினால் கையளிக்கப்பட்டவர்கள் பற்றியும் கட்டாயம் பேச வேண்டியுள்ளது.

இராணுவத்தில் சரணடைந்தவர்களின் ஆதாரம், கடந்த ஆட்சிக் காலத்தில் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்றிருந்தாலும், தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இவ்வாறு தெருக்களில் வெயிலில் இருக்கும் மக்களுக்கு பதில் கூறாமல் அரசாங்கம் இருப்பதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் கண்டனத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாளை மறுதினம் 27 ஆம் திகதி பொது மக்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்தவர்களும், அரசியல் கட்சிகள் அனைவரும் இந்த மக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தினை இந்த அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை.

நிலங்கள் விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் தீரவில்லை. அந்த மக்களின் கண்ணீர் அந்த மக்களின் வேண்டுகோளுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்.

மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் மிகத் திட்டவட்டமான அழுத்தங்களைப் பிரயோகித்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை மிக குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்பு போராட்ட மக்களின் கோரிக்கைகள் வெற்றி பெற நாளைய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

இதுவேளை, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை குறுகிய காலத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் உறுப்பு நாடுகள் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 -tamilwin.com
TAGS: