காணாமல்போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென பிரிட்டன் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதுவர் இல்லத்தில் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
புதிய அரசமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள், அதில் காணப்படும் தாமதங்கள் மற்றும் எதிர்காலத்தில் அந்த செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக புதிய அரசமைப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும், பாதுகாப்பையும், சமத்துவத்தையும் உறுதிப்படுத்தக்கூடியதாகவும் அமைய வேண்டும்.
அவ்வாறான அரசமைப்பொன்றையே நாம் ஏற்றுக்கொள்வோம் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமில்லை. இலங்கை அரசு அந்தத் தீர்மானத்தில் உள்ள விடயங்களை முறையாக மற்றும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தங்களை பிரிட்டன் தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
அத்துடன் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் பிரிட்டன் கொண்டிருக்கும் கரிசனை நீடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம்.
இவற்றுக்கு அப்பால் வடக்கு, கிழக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் போராட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தோம்.
விசேடமாக காணி, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகள் தொடர்பில் அரசின் அசமந்தமான செயற்பாட்டின் வெளிப்பாடாகத்தான் மக்கள் இவ்வாறு தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு நாம் முழுமையான ஆதரவையும் வழங்குகின்றோம் என்பதையும் அவர்களிடத்தில் குறிப்பிட்டோம்.
மேலும், விசேடமாக காணாமல்போனோர் விடயத்தைக் கையாள்வதற்காக சட்டமூலம் இயற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதும் தற்போது வரையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலத்தை அமைக்கும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்காது காலத்தைக் கடத்தி வருகின்றது.
ஆகவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வை எட்டும் முதற்படியாக அந்த அலுவலகத்தை உடனடியாக திறப்பதற்குரிய அழுத்தத்தை அரசுக்குப் பிரிட்டன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
-tamilwin.com