கடல் பாதுகாப்பு: இலங்கைக்கு இரு ஆள்கடல் அவதானிப்பு கப்பல்களை வழங்கும் இந்தியா

india-sri-lankaஇலங்கை கடற்படைக்கு இந்தியாவின் இரண்டு ஆள்கடல் அவதானிப்பு கப்பல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடல் பாதுகாப்பு, கடல் உயிரின பாதுகாப்பு, கடல் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடலில் இடம்பெறும் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்தல் போன்றவற்றுக்கு இந்தக் கப்பல்கள் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கோவா நகரில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தில் இந்தக் கப்பல்களை கட்டும் பணிகள் இடம்பெறுகின்றன.

இந்தக் கப்பலை பார்வையிடுவதற்காக இலங்கை கடற்படை அதிகாரிகள் தலைமையிலான குழுவொன்று இந்தியாவுக்கு சென்றுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இந்த இரண்டு கப்பல்களின் கட்டுமான பணிகள் அங்கு நிறைவடையும் நிலையில் உள்ளன. 105.7 மீற்றர் நீளமும், 13.6 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல்களில் உலங்கு வானூர்தியை தரையிறக்கக் கூடிய வசதியும் உள்ளது.

இதில் 18 கடற்படை அதிகாரிகளும், 100 சிப்பாய்களும் பணியாற்றுவதற்கான வசதிகள் உள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

4 ஆயிரத்து 500 கடல்மைல் தூரத்தை அவதானிக்கக் கூடிய வல்லமை இந்தக் கப்பல்களுக்கு உள்ளது. இந்தக் கப்பல்களில் நிர்மாணப் பணிகள் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ஒரு கப்பல் எதிர்வரும் ஜீன் மாதம் இலங்கை கடற்படைவசம் கையளிக்கப்படவுள்ளதுடன், இரண்டாவது கப்பல் அடுத்த வருடத்தில் கையளிக்கப்படும் என்றும் இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

 -tamilwin.com
TAGS: