தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வென்றெடுக்கவும், தமிழ்த் தேசத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய்க் குரல் கொடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும் நாளை திங்கட்கிழமை(01) யாழில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று அவர் கருத்து வெளியிடுகையில்,
அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிக் கண்டறியவும், இனவழிப்பு, போர்க் குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
தமிழர் தாயகத்திலிருந்து ஸ்ரீலங்கா இனவழிப்பு இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும். இடம்பெயர்ந்து வாழும் மக்கள் சொந்தவிடங்களில் மீளக் குடியமர உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த மேதினப் பேரணியும், பொதுக் கூட்டமும் இடம்பெறும்.
இதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வென்றெடுக்கவும், தமிழ்த் தேசத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய்க் குரல் கொடுப்போம்.
இலட்சியத்தின் கீழ் அனைவரும் ஒற்றுமையாய் ஓரணியில் திரள்வோம். அணி திரண்டு வாரீர் எனவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.