தமிழ் மக்களுக்கு விமோசனம் எங்களிடமே உள்ளது. ஆகையினால் தமிழ் மக்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
காலி முகத்திடலில் இன்று இடம் பெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினரின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தை நிறைவு செய்து வைத்தது மட்டும் இல்லாமல், சுமார் 14 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவித்தோம்.
அவர்களை சமூகத்துடன் இணைத்தோம், அவர்களுக்கு வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தோம்.
அதேபோல் வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை நாமே செய்து கொடுத்தோம். பாரிய அபிவிருத்தி திட்டங்களைச் செய்து வைத்தோம். இப்போதைய ஆட்சி என்ன செய்தது?
அவர்களுக்கான தேவைகளை நாம் செய்து வைத்தோம். அவர்களின் விடிவு எம்மிடமே இருக்கின்றது அதனால் எம் பின்னால் வட கிழக்கு மக்கள் வர வேண்டும்.
மேலும், மிகவும் சக்தி வாய்ந்த புலிகளை அழிக்க உதவிய இராணுவத்தினரை இப்போது மக்களுக்கு எதிராக திருப்பிவிடப் பார்க்கின்றார்கள். அதற்கு ஒரு போதும் இடமளிக்க கூடாது.
இராணுவத்தினரை போர்க் குற்றங்களில் சிக்க வைக்க முயற்சி செய்து கொண்டு வருகின்றது இந்த நல்லாட்சி. அப்படி செய்தால் நாடு காட்டிக் கொடுக்கப்படும்.
என்னையும் இதில் சிக்க வைத்து விசாரணைக்கு அழைக்கவே சதித் திட்டம் தீட்டுகின்றார்கள். இராணுவத்தினரை குற்றவாளிகளாக்குவதற்கும், நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கும் நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.
மகிந்தவின் கடன்களே நாட்டின் இப்போதைய நிலைக்கு காரணம் எனக் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். மத்திய வங்கி ஊழலை மறைத்து விட்டார்கள்.
இப்போது பொருளாதாரம் உட்பட அனைத்திலும் நாடு வீழ்ச்சியடைந்து விட்டது. குப்பை மேட்டைக் கூட முறையாக கையாளாத ஆட்சியே இப்போது நடந்து கொண்டு இருக்கின்றது. இது வேடிக்கையானது.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால் அப்போது நான் குண்டு துழைக்காத வாகனங்களை கொண்டு வந்தேன், அது உண்மைதான்.
அதனை அனைவருக்கும் கொடுத்தேன், ஏன் ஜனாதிபதி மைத்திரிக்கும் கொடுத்தேன். காரணம் விடுதலைப் புலிகளிடம் இருந்து அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக.
ஆனால் இப்போது இவர்கள் செய்யும் அராஜக ஆட்சிக்கு குண்டு துழைக்காத வாகனங்கள் அல்ல, இடி தாக்காத வாகனங்களே கொண்டு வர வேண்டும்.
இந்த முறைகேடான ஆட்சியை நிறுத்த வேண்டும். சரியானதொரு ஆட்சியை அமைக்க வேண்டும் அதற்காக மக்கள் அனைவரும் இணைய வேண்டும் எனவும் மகிந்த தெரிவித்தார்.
-tamilwin.com