சுவாமி விபுலானந்தர் தொடர்பிலான ஆய்வுகள், மறைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள், அவர் தொடர்பிலான யதார்த்த சிந்தனைகள் மீளமைக்கப்பட்டு இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் தெரிவித்துள்ளார்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு இன்று (03) மட்டக்களப்பு நகரில் உள்ள திருநீற்றுப்பூங்காவில் உள்ள விபுலானந்தரின் சிலையருகில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.
இங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
சுவாமி விபுலானந்தர் தொடர்பிலான விளக்கங்களை நான் எனது தாய் மற்றும் எனது தாயின் தாய் ஆகியோரிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். அவரின் சிறப்பினைக்கண்டு நான் மெய்சிலிர்த்துள்ளேன்.
மனங்களை ஒருமுகப்படுத்துவதும், இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற உண்மையான யதார்த்தத்தினை வெள்ளைமலர் என்னும் பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
காரைதீவில் பிறந்து மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் கற்று விஞ்ஞான பட்டதாரியாகி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதல் முதல்வராக திகழ்ந்தவர்.
இந்த நாட்டுக்கும் மண்ணுக்கும் பெருமையினை ஈட்டிக்கொடுத்த பின்னர் இந்துமத துறவியாக கிழக்கு மாகாண கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்ற ரீதியில் இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபராக கலந்துகொள்வதில் பெருமையடைகின்றேன்.
எவ்வாறு இந்தியாவின் மீள் எழுச்சிக்கு சுவாமி விவேகானந்தர் அடித்தளமாக அமைந்தாரோ அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கும் சுவாமி விபுலானந்தர் அடித்தளமாக அமைந்திருப்பது செல்லும் இடங்களில் எல்லாம் அவரின் பேரில் உள்ள பாடசாலைகளும் மன்றங்களும் எடுத்துக்காட்டுகின்றது எனவும் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு, மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் வி.தவராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வின்போது முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125வது ஆண்டு ஜனன தினத்தை குறிக்கும் வகையில் மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றதுடன் சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளின் ஈசன் உவர்க்கும் மலர்கள் என்னும் பாடல் இசைக்கப்பட்டதுடன் விபுலானந்தம் என்னும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
-tamilwin.com