தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்பாளராக இருந்த ராஜா தனது மூன்று பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இளம்பருதியும் தமது பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருக்கின்றனர். எனினும், அந்த மக்களின் போராட்டங்களை அரச தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஆரம்ப காலம் முதல் தமிழ் மக்கள் அறவழி போராட்டத்தையே முன்னெடுத்திருந்தனர். எனினும், அவர்களின் போராட்டம் ஆயுதம் கொண்டு நசுக்கப்பட்டது. அதன் பின்னரே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராட நேர்ந்தது.
இவ்வாறு தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கை அரசாங்கமும், இராணுவமும், பொலிஸாருமே காரணம்.
திருகோணமலையில் 154 தமிழர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டதுடன், ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது.
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு என்பன ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், அதன் விசாரணை அறிக்கைகள் அரசாங்கத்தினால் புறம்தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு தொடர்பாளர் ராஜா தனது மூன்று பிள்ளைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்தார்.
இறுதி யுத்தத்தின் போது அருட்தந்தை பிரான்ஸிஸ் முன்னலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் 58 பேருக்கு என்ன நடந்தது..?
அத்துடன், இளம்பருதியும் தமது பிள்ளைகளுடன் சரணடைந்தார். இவர்கள் சரணடைந்ததை நேரில் கண்ட சாட்சியம் இருக்கின்றன. படையினரிடம் சரணடைந்த அவர்கள் எங்கே.?
இந்நிலையிலேயே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டமும் ஆயுதம் கொண்டு நசுக்கப்படுகின்றதா? எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த அடக்கு முறை மூலம் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுக்கின்றதா? போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
கையளிக்கப்பட்ட தமது உறவுகளையே அந்த மக்கள் கேட்கின்றனர். சர்வதேசத்தினை எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த உயரிய சபையில் சுட்டிக்காட்டுகின்றேன்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், அந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும். எனினும், அரசாங்கம் தீர்வு வழங்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடத்திலிருந்து விலகிப் போகின்றது.
எவ்வாறாயினும், தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்படுமாக இருந்தால் இந்நாடு வளர்ச்சியடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com