இந்தியப் படகுகளால் நாசமாக்கப்பட்டுள்ள வடபகுதி மீனவர்களின் பல கோடி ரூபா பெறுமதியான கடற் தொழில் உபகரணங்களுக்கான இழப்பீடுகளை யார் வழங்குவது என்பது தொடர்பாக உரிய பதில் கூற வேண்டும் என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட்ஆலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (06) பிற்பகல்-02.30 மணி முதல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தியப் படகுகளைக் கடற்தொழில் அமைச்சோ அல்லது இலங்கை அரசாங்கமோ விடுவிக்குமாகவிருந்தால் அந்தப் படகுகள் மீண்டும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் வராது என்ற உத்தரவாதம் அல்லது நிபந்தனையை யார் நிறைவேற்றுவது? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆனால், இந்த உத்தரவாதம் அல்லது நிபந்தனையில்லாமல் படகு விடுவிப்பது மாத்திரம் தான் என்றால் ஒட்டு மொத்தமாக வடபகுதி மீனவர்களான நாம் படகு விடுவிப்புக்கெதிரான கருத்துக்களையே முன்வைப்போம்.
தொடர்ந்தும் வடபகுதி மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் தென்னிலங்கைத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்துப் பாரிய போராட்டங்களை வடபகுதியிலும், கொழும்பு நகரிலும் முன்னெடுக்க வேண்டி வரும் என்பதை அரசாங்கத்திற்கு எச்சரிக்கையாக விடுக்க விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.
எதிர்வரும் -11 ஆம் , 12 ஆம் திகதிகளில் இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் கடந்த-2015 ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பான பல்வேறுபட்ட முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் இந்திய, மற்றும் இலங்கை ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர வடபகுதி மீனவர்களின் இணைக்கப்பாடின்றி, அவர்களின் கருத்துக்களை அறியாமல் கைப்பற்றப்பட்டுள்ள படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது என்ற கருத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
கடந்த பாராளுமன்றத்தின் அமர்விலும் இந்த விடயத்தை மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். வடபகுதி மீனவர்கள் தொடர்பான அவரது கருத்துக்குத் தொடர்ந்தும் நாங்கள் நன்றி தெரிவித்து வருகிறோம்.
குறிப்பாக நவம்பர் மாதம்-02 ஆம் திகதி டில்லியில் பேசியதற்கிணங்க கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் எக்காரணம் கொண்டும் விடுவிக்கப்படாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
ஆனால், மீன்பிடி அமைச்சரின் பல கருத்துக்களில் வித்தியாசமான போக்குகள் காணப்படுகின்றன. இன்று அரச மட்டத்தில் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதா?
அல்லது இந்தியத் தரப்பால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதா? என்பது கேள்வியாகவிருக்கின்றது. கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க அவர் எடுக்கும் நடவடிக்கையானது எங்களது கடந்த காலப் போராட்டங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாகவுள்ளது.
வடபகுதி மீனவர்களின் பிரச்சினை பல வருடங்களாக நீடித்து வருகிறது. கடந்த கால யுத்ததிற்குப் பின்னர் வடபகுதி மீனவர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, தொழில் செய்வதிலுள்ள முட்டுக் கட்டைகள் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளன.
குறிப்பாகப் புதிய தொழில் முறைக்கான யுக்திகளோ அல்லது தொழில் செய்வதற்கான உபகரணங்களோ வடபகுதி மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
நாங்கள் பல தடவைகள் விடாப்பிடியாக நின்று பேசிப் பார்த்தோம். விட்டுக் கொடுத்தும் பேசிப் பார்த்தோம். வடபகுதி மீனவர்கள் அழிவுகளிலிருந்து மீண்டு வரும் காலத்தில் உங்களால் முன்னெடுக்கப்படும் தொழில் நடவடிக்கையால் தான் அவர்கள் துன்பகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் எமது கடல் வளங்களை சூறையாடி அதன் ஊடாக தமிழக மீனவர்களான நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கி வருகிறீர்கள்.
ஆகவே, இந்தியக் கடற்தொழிலாளர்கள் தயவுடன் எம் மீனவர்கள் மீது கருணை கொண்டு எமது கடல் வளத்தைச் சுரண்டும் அல்லது சூறையாடும் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளுமாறு தொப்புள் கொடி உறவுகள் என்ற உரிமையுடன் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.
அத்துடன் கடந்த காலங்களில் இந்திய மீனவர்களின் படகுகளால் சேதமாக்கப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான வடபகுதி மீனவர்களின் கடல் உபகரணங்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கையையும் முன்வைக்க விரும்புகிறோம் என்றார்.
2ஆம் இணைப்பு
இலங்கைக்கு இரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறாமல் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட இந்திய இழுவை படகுகளையும், இந்திய மீனவர்களையும் விடுவிக்க கூடாது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கேட்டுள்ளது.
மேலும் வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறப்படாமல் இந்திய இழுவை படகுகளும், இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டால் வடக்கில் மட்டுமல்லாமல் தெற்கிலும் பாரிய போராட்டங்களை நடத்துவோம் எனவும், இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவது தொடர்பாக ஆக்கபூர்வமான பதிலை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதேவேளை கடந்த மாதம் 5ம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது வடமாகாண கடற்றொழிலாளர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்திய இழுவை படகுகளும், இந்திய மீனவர்களும் விடு விக்கப்படமாட்டார்கள் என கூறியிருந்தார்.
இந்திய இழுவை படகுகள் விடுவிக்கப்பட்டால் அவை மீளவும் இலங்கை கடல் எல்லைக்குள் வராது என்பதற்கு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட 6 நிபந்தனைகள் வழங்கப்பட்டிருந்தன.
அவற்றுக்கும் ஆக்கபூர்வமான பதில் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்திய இழுவை படகுகள் விடுவிக்கப்பட்டால் வடக்கில் மட்டுமல்லாமல் தெற்கிலும் அதாவது தலைநகரிலும் போராட்டங்கள் வெடிக்கும் என இணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.