வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் ஜனாதிபதி – பிரதமர் அலுவலகங்களின் முன்னால் நடத்தப்பட வேண்டியது: விக்னேஸ்வரன்

viknswaran“வேலையற்ற பட்டதாரிகளின் அரச வேலைக்கான போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி அலுகலகத்தின் முன்னரோ பிரதமர் அலுவலகத்தின் முன்னரோ தான் நடைபெற வேண்டும்.

வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் (மாகாண சபை) வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. வேலை பெற்றவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் போகும் மத்திய அரசாங்கமே அதைச் செய்யவேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காகச் சென்ற முதலமைச்சர், மாகாண சபை வளாகத்துக்குள் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நிலையிலேயே அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று காலை 09.30 மணியளவில் வடமாகாண சபைக் கூட்டத்திற்கு நான் சென்ற போது வேலையற்ற பட்டதாரிகள் எனக் கூறப்பட்ட பல இளைஞர் யுவதிகள் எமது வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரின் அமைச்சுக் காரியாலயங்களின் முன் வாயிற் கதவுகளை அடைத்து பெருவாரியாக நின்று கொண்டிருந்தார்கள். வடமாகாண சபையின் பக்கமாக செல்லும் பாதையிலும் வாயிற் கதவடைத்து கூட்டம் நின்றது. நான் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தேன். ஏற்கனவே அவர்களுடன் நான் பேசிய விடயங்கள் தான் அவை. வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வேண்டும் என்று கேட்டார்கள்.

அண்மையில் முதலமைச்சர் மகாநாட்டின் போது மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர்களுக்குக் கொள்கை ரீதியாக அளித்த வாக்குறுதியை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். மாண்புமிகு ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில் நாலாயிரத்திற்கும் மேலான பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்துவிட்டார் எமக்குக் கிடைக்கவில்லை என்ற ரீதியில் குறைபட்டுக் கொண்டார்கள். அவர்களின் புரியாமையை அவர்களுக்கு எடுத்து விளக்கினேன். மாண்புமிகு ஜனாதிபதி வடகிழக்கு மாகாணங்கள் இரண்டுஞ் சம்பந்தமாகவே அவ்வாறான வாக்குறுதியை வழங்கினார் என்பதை எடுத்துக்காட்டினேன். பத்திரிகைச் செய்திகளோ ஒரு மாகாணத்திற்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் மற்றைய மாகாணத்தை புறக்கணித்துள்ளதாகவும் அமைந்திருந்ததைச் சுட்டிக்காட்டினேன். அன்றைய தினம் (06.05.2017) முதலமைச்சர்கள் எல்லோர் முன்னிலையிலும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வடகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் விரைவில் வேலை வாய்ப்பைக் கொடுப்பதாகக் கூறியதைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் வடமாகாணசபை அவைத்தலைவர் தமக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே இடத்தில் வைத்து வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்தி ஏன் இதுவரை அந்த வாக்குறுதி செயற்படுத்தப்படவில்லை என்று கேட்டார்கள்.

அதற்கு நான் மாகாண சபையுடன் தொடர்புடைய யார் என்ன சொன்னாலும் தீர்மானம் எடுக்க வேண்டியது மத்திய அரசே என்று கூறி அதனால்த்தான் நாங்கள் இப்பொழுது மத்திய அரசுடன் பேசி வருகின்றோம் என்பதைத் தெளிவுபடுத்தினேன்.

எமது மாகாணசபையில் மொத்தமாக பட்டதாரிகளுக்கு 1171 வெற்றிடங்கள் இருப்பதையும் இங்குள்ள மத்திய அரசின் மாகாண திணைக்களங்களில் 329 வெற்றிடங்கள் இருப்பதையும் மொத்தம் 1500 பேர்களுக்கு உடனேயே வேலை வாய்ப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதை அவர்களுக்கு விளக்கினேன். மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு அவர்களை இணைப்பது பற்றியும் பேசப்பட்டது என்று அறிவித்தேன்.

அத்துடன் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் வெற்றிடங்கள் பல இருப்பதை மாண்புமிகு ஜனாதிபதிக்கு எடுத்துக் காட்டியபோது அந்த வெற்றிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கைகள் எடுப்பதாகக் கௌரவ துமிந்த திசாநாயக்க, விவசாய அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

இவற்றை எல்லாம் இளைஞர் யுவதிகளுக்கு எடுத்துச் சொல்லியும் தமக்கு வேலைகள் கிடைப்பது சம்பந்தமாக எமது உத்தரவாதங்களைப் பெறவே அவர்கள் முயன்றனர். உத்தரவாதங்களை நாம் தரமுடியாதென்றும் மத்திய அரசாங்கமே அவற்றைத் தரமுடியும் என்ற போது சில இளைஞர்கள் யுவதிகள் அதட்டலாக எம்மை அவ்வாறான உத்தரவாதத்தைத் தருமாறும் இல்லையேல் அவ்விடத்தில் இருந்து அசைய மாட்டோம் என்றும் கூறினார்கள். ‘என்னால் கூறக் கூடியதை நான் கூறிவிட்டேன். மிகுதியை ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் பேசிய பின் கூற முடியும்’ என்று கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கையில் வாயிற் கதவுகளுக்கு அவர்களே சங்கிலி போட்டு பூட்டும் இட்டுத் திறப்பை அவர்கள் வைத்திருக்கின்றார்கள் என்று தெரியவந்தது. திறக்குமாறு கேட்டபோது எவரும் முன்வரவில்லை. எனது பாதுகாப்புப் பொலிசார் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நடவடிக்கை எடுக்கலாமா என்று கேட்டார்கள். அத்துடன் ஒரு பொது அலுவலரை தனது கடமைக்குச் செல்லாமல் தடுப்பது குற்றம் என்றும் அது சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்க பொலிஸூக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவா என்றும் கேட்டார்கள். நான் அவர்களைக் கட்டுப்படுத்தி வேலையற்ற பட்டதாரிகள் சுமார் இரண்டுமாத காலமாக வேலை வேண்டும் என்று போராடி வரும் அவர்களின் விடாமுயற்சிக்கும் அவர்களின் உண்மையான பிரச்சனைக்கும் மதிப்பளித்து அங்கிருந்து அகன்று விட்டேன்.

ஆனால் அவர்களின் போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி காரியாலயத்தின் முன்னரோ பிரதமர் அலுவலகத்தின் முன்னரோ தான் நடைபெற வேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. வேலை பெற்றவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் போகும் மத்திய அரசாங்கமே அதைச் செய்யவேண்டும். அண்மையில் முதலமைச்சர்கள் மாநாட்டின் போது எம் பலதரப்பட்ட மக்கள் செய்து வரும் தொடர் போராட்டங்கள் பற்றி பிறமாகாண முதலமைச்சர்கள் முற்றிலும் அறியாமல் இருந்தமை எந்தளவுக்கு நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணர வைத்தது. விரைவில் இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகள் தீர இறைவன் வழி வகுப்பானாக!” என்றுள்ளது.

-puthinamnews.com

TAGS: