‘அரசாங்கத்தை மிரட்டிச் சாதியுங்கள்’; த.தே.கூ.வுக்கு சங்கரி ஆலோசனை!

Sangary4காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, “கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என்றால், பதவிகளை தூக்கி எறிவோம் அல்லது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்று மிரட்டி காரியங்களைக் சாதியுங்கள்” என்றும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் வீ.ஆனந்தசங்கரி இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், எத்தனையோ புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களைத் தம்வசம் வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் அவ்வாதாரங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அருகில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் விசாரணை செய்தால், அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, யுத்தத்தை தான்தான் முன்னின்று நடத்தி, வெற்றியைப் பெற்றுக் கொடுத்தேன் என்று கூறுகின்ற சரத் பொன்சேகா, தற்போது அமைச்சராக பாராளுமன்றத்தில் இருக்கின்றார். அவரிடமே இந்த ஆதாரங்களைக் காட்டினால், அவர் இலகுவாக இராணுவ அதிகாரிகள் அநேகரை அடையாளம் காண உதவுவார். அதனடிப்படையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்து, அவர்களின் உறவுகளுக்கு ஒரு முடிவை அறிவிக்கலாம். இந்தப் பொறுப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையில் எடுத்து, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், எந்தவிதமான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாமல் 100வது நாளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில், அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பாராமுகமாகவே நடந்து கொள்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பதவிகளைத் தூக்கி எறிவோம் என்றோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்போம் எனக்கூறியோ, மிரட்டிச் சாதிக்கமுடியும்.”என்றுள்ளது.

-puthinamnews.com

TAGS: