சிறிலங்காவின் கூட்டு ஆட்சி தொடர இந்தியா உதவ வேண்டும்- மோடியிடம் கோரிய சம்பந்தன்

TNA-modi-1சிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தவதற்கு இந்தியாவின் உதவி தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், வெள்ளிக்கிழமை மாலை நடந்த சந்திப்புத் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர்,

‘நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு எடுத்து விளக்கினேன்.

தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சித் திட்டம் தொடர, இந்தியாவின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அரசாங்கத்தில் ஒற்றுமையில்லாது போனால் ஒரு நாடு முன்னேற முடியாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம்.

தடைகள் இருந்தாலும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவினாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும், முன்னோக்கி நகர முடியும் என்று நம்புகிறோம்.

நாட்டைப் பிளவுபடுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறோம்.

நாட்டின் நலனுக்காக இரண்டு பிரதான கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து செயற்படாது போனால், இலக்கை அடைய முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: