நாடாண்ட தமிழர் ரத்தத்தில் செங்கடலாகிப் போன முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும்!

mullikalvai-600இப்படித்தான் நாளேடுகள் நாளை எழுதும்… எழுத வேண்டும் என தாயக விடுதலைக் கனவுடன் தம்மையே தாரைவார்த்துக் கொடுத்தவர்கள்தான் இலங்கை தீவின் வடக்கு கிழக்கு வாழ் பூர்வகுடி தமிழர்கள்.

தமிழர் பெருமையை இன்றும் பேசும் சங்கப்பாடல்கள் குறிப்பிடும் ஈழம்தான் அந்த வடக்கு கிழக்கு. ஈழத்தையும் சிங்களத்தையும் இணைத்துவிட்டுப் போனான் ஆங்கிலேயன்.

அன்றிலிருந்து ஆண்ட பரம்பரையான தமிழ்ப் பெருங்குடிகள் சிங்களத்து அடிமைகளாகிப் போக நேரிட்டது. காந்தி தேசமாம் இந்தியாவை தந்தை மண்ணாக போற்றும் ஈழத்து தமிழர்கள் அறவழிப் போராட்டங்களால் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க களமாடினர்.

ஈழத்து காந்தி எனப்படும் தந்தை செல்வாவின் தலைமையிலான அறவழிப் போராட்டத்தால் கிஞ்சித்தும் பலனில்லாமல் போக தனித் தமிழீழமே தீர்வு என வட்டுக்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெறிகொண்ட சிங்கள பேரினவாதம் காக்கை குருவிகளைப் போல தமிழர்களை வேட்டையாடியது..

பொறுத்தது போதுமென சிங்களத்தை வேட்டையாட வேங்கைகளாக தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி களம்புகுந்தனர். காலங்கள் உருண்டோட தம்பி பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் வேர்பிடித்து ஈழமண்ணில் நின்றது. எத்தனை எத்தனையோ சமர்கள்! எதிரிகள் எண்ணிப்பார்க்க முடியாத வெற்றிகள்!

புலிகளின் கொரில்லா யுத்தத்தின் உச்சத்தில் சிங்களம் உருக்குலைந்து போனதெல்லாம் சரித்திரம்… சமாதானப் பேச்சு, துரோகங்கள் என எல்லாமும் நடந்தேறியது… 2006-ம் ஆண்டு இறுதி யுத்தத்தை கொடுங்கோலன் ராஜ்பக்சே தொடங்கி வைத்தான்.

தெற்காசியாவில் தமிழீழம் எனும் ஒரு தேசம் உருவாவதையே விரும்பாத உலக நாடுகள் ஒன்று சேர்ந்தன… துளிரத் தொடங்கிய தமிழீழ தேசம் எனும் அரும்பு மலரையும் அதைத் தாங்கி பிடித்த லட்சோப லட்சம் தமிழர்களையும் ஈவிரக்கமின்றி வேட்டையாடின.

2009-ம் ஆண்டு மே மாதம் 17, 18 நாட்களில் ஈழத் தமிழர்களின் இறுதிப் புகலிடமாக இருந்த முள்ளிவாய்க்காலும் நந்தி கடலும் தமிழர்களின் குருதியால் செங்கடலாகிப் போனது… வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையப் போன தமிழர் தளபதிகள் எல்லாம் ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் என்கிற ஒற்றை காரணத்துக்காகவே பாலகன் பாலச்சந்திரனை படுகொலை செய்தது சிங்களம். இசைப்பிரியா உள்ளிட்ட எத்தனையோ போராளிகளை வன்புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்தனர் சிங்கள காடையர்கள். ஆயிரமாயிரம் தமிழர் தளபதிகள் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர்.

ஆண்டுகள் உருண்டோடி 8 ஆகிவிட்டன.. ஆனால் காணாமல் போனோர் கதி என்ன? இனப்படுகொலைக்குதான் தண்டனை என்ன? என்ற கேள்விகளுக்கு எந்த ஒருவிடையுமே இல்லை.. முள்ளிவாய்க்காலிலும் நந்தி கடலிலும் தமிழர் ரத்தம் உறைந்தபடியேதான் இருக்கிறது.. அந்த குருதிக்கும் ஒருநாள் உயிர் வரும்… அது உயிர் வலிகளின் ஒட்டுமொத்தமாக பெரும்பிரளயமாக மீண்டும் களம் புகும் என்பதுதான் தமிழர்களின் தாகமாக தொடருகிறது!

tamil.oneindia.com

TAGS: