ஈழத்தில் செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துக்க நாள் இன்று: தரணியெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்

mulli2ஈழத் தமிழர் வாழ்நாளில் இன்று கறுப்பு நாள், செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துயர்படிந்த நாள், மாபெரும் மனிதப் படுகொலை நடந்த நாள்.

முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறித்தெடுக்கப்பட்ட தமது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலிசெய்யும் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபடும் நாள்.

தமிழ் இனத்தின் மீது அரசாலும் அதன் படைகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய மிக மோசமான படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நாள் இன்று.

இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி அரச படைகளால் கொன்று குவிக்கப்பட்ட நாளை – ஈழத்தின் மானிடப் பேரவலம் நடந்தேறிய நாளை நினைவுகூர்ந்து வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசங்கள் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளன.

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது மூன்று இலட்சம் தமிழ் மக்கள் மிகக் குறுகிய வெளிக்குள் முடக்கப்பட்டு, உணவு, மருந்து உதவிகள் எதுவுமின்றி அந்தரித்து, அரசின் குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்டு கொடூரமான முறையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கடந்த 2009 மே மாதத்தின் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தமிழ் மக்களின் அவலச்சாவு உச்சத்தில் இருந்தது. அத்துடன், இறுதிப்போர் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், மே 12ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையிலான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக உலகத் தமிழர்கள் பிரகடனப்படுத்தி அதனை அனுஷ்டித்து வருகின்றனர்.

இறுதி நாளான மே 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளையும் பெருமெடுப்பில் நடத்தி வருகின்றனர்.

அதற்கமைய இம்முறையும் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப்போன உறவுகளுக்காக தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கிலும், தமிழகத்திலும், தமிழ் வசிக்கும் புலம்பெயர் தேசங்கள் எங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இறுதிப் போர் நினைவுகளை மீள் நிறுத்தி, தமிழின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட உறவுகளுக்காகவும் இன்று

நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் உலகத் தமிழ் மக்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதன் பிரதான நிகழ்வு, பெரும் தமிழின அழிப்பு நடந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறுகின்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த தூபி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கு கப்பலடிப் பாதையில் கடந்த வருடம் நடைபெற்றது.

இந்த வருடமும் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் அங்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது.

கடந்த வருடம் அமைக்கப்பட்ட தூபி சேதமடைந்திருந்தது. நேற்றுமுன்தினம் அது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதனைச் சுற்றியுள்ள பகுதி சிமெந்துப் பூச்சிர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்கு மக்கள் ஒன்றுகூடும் இடங்களும் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான பஸ் ஒழுங்குகள் மாவட்ட ரீதியாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன என்று நினைவேந்தல் குழு சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் நின்று அரச படைகளால் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட எமது உறவுகளை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவுகூரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: