நாட்டில் சமாதானமாக வாழமுடியுமா என்ற அச்சம் உருவாகியிருக்கிறது: சம்பந்தன்

sambaஇனவாதத்தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளன.

சிறுபான்மையினருக்கு எதிராக தலைதூக்கியுள்ள அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

இதன் போது உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்,

“இனம் எதுவாக இருந்தாலும், மதம் எதுவாக இருந்தாலும் சமாதானமாக வாழவே மக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில், சிறுபான்மை இனங்களை அச்சுறுத்தும் வகையில் குழுவொன்றுசெயற்பட்டு வருகின்றது. இவ்விதமான நிலைமைகள் தொடர்வதற்கு இடமளிக்கமுடியாது.

தனியார் சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன. தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டில் சமாதானமாக வாழமுடியுமா என்ற அச்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

கடந்தகால கசப்பான சம்பவங்கள் மீண்டும் தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. எனவே, அனைவரும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, அச்சத்தை மூட்டும் வகையில் செயற்படும் குழுவுக்கு எதிராக அரசு துரித சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். கடமை உணர்வோடு அரசு இதைச் செய்யவேண்டும் என்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போது,

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களில் பாரியளவு அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இது பற்றி சிங்கள, ஆங்கில ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை.

அத்துடன், ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரும் அசமந்தமாகவே செயற்பட்டனர்.

எனவே, உரிய வகையில் இந்தக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் குறிப்பிடுகையில்,

“வடக்கிலும், தெற்கிலும் இனவாதிகள் இருக்கின்றனர். இவர்கள் எல்லாமே மச்சான்மார்கள். எனவே, விளையாட வேண்டாமென இனவாதிகளுக்குக் கூறிக்கொள்கின்றேன். அரச பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே, இனவாதிகளுக்கு இடமளிக்கமுடியாது.

இது விடயம் தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் துரித நடவடிக்கைகளை எடுப்பார் என உறுதியாக நம்புகின்றேன். இது பற்றி அமைச்சரவையிலும் பேசப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கச் செய்வதற்கான சூழ்ச்சியாகவே இப்படியான செயல்கள் நடக்கின்றன” என்று அமைச்சரும் கூறினார்.

அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சூழ்நிலையில், இது குறித்து சினுபான்மை சமூகத்தினர் தமது பிரதிநிதிகளிடம் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: