விநாயகமூர்த்தி மறைவு: மீட்பரை இழந்து தவிக்கின்றோம்

001தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயாவின் இறப்புச் செய்தி அறிந்த நாம் ஆறாத்துயர் கொண்டு விழி கசிகின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகள் ஆகிய எமது பார்வையில் அன்னாரை ஒரு மீட்பராக கண்டுணர்ந்து வந்துள்ளதால் அவரின் இழப்பு பேரிழப்பாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளும் வதைகளும் கட்டவிழ்த்து விட்ட காலம் முதல் அரசியல் கைதிகளோடு உறவாடி, அரசியல் சதுரங்கத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு சிறைக்குள் அநீதி இழைக்கப்பட்ட தருணங்களில் எல்லாம் அழையாத விருந்தாளியாக வந்து அவர்களை ஆற்றுப்படுத்தினார். ஒரு நல்ல அன்பரை இன்று நாம் இழந்துவிட்டோம்.

அவர், அரசியல் சாயம் இடப்பட்ட நிதி நிறுவனங்களில் நிமிர்ந்து நின்று நீதி கேட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றவியல் வழக்குகளில் பட்டறிவுமிக்க சட்டத்தரணியாக செயற்பட்டு வந்ததுடன், மிக நெருக்கடியான சூழ்நிலைகளைக் கடந்து தனது இறுதிக்காலம் வரை தன்னலம் பாராது தமிழ்க் கைதிகளின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து வந்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற அஹிம்சைப் போராட்டங்களிலும் பங்கெடுத்து நியாயபூர்வமான கருத்துகளைப் பதிவுசெய்ததன் மூலம் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தை சர்வதேச மட்டத்துக்கு நகர்த்தியிருந்தார்.

அகவை மூர்ப்பின் காரணமாக உடல் தளர்ந்தபோதும் உளம் தடுமாறாது நாடாளுமன்றிலும் அவரது வகிப்பு மெச்சத்தக்கதாக அவதானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தனது 84ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்ட அன்னாரின் இழப்பையிட்டு அரசியல் கைதிகளாகிய நாம் கண்ணீரால் அஞ்சலித்தோம்.

மேலும், மூத்தவரின் பிரிவால் துயரடைந்திருந்திருக்கும் குடும்பத்தினருக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றுள்ளது.

விநாயகமூர்த்திக்கு யாழில் பெருமளவிலானோர் அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், கல்விச் சமூகத்தினர், நீதித்துறையினர், அரசியல்வாதிகள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

விநாயகமூர்த்தியின் உடலம் இன்று காலை சாவகச்சேரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நிகழ்வுகள் பிற்பகல் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது.

சுகவீனமடைந்திருந்த விநாயகமூர்த்தி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவரது உடலம் கொழும்பில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் முதலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டிருந்தது.

இன்று காலை சாவகச்சேரி நகரப் பகுதியில் உடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது பெருமளவிலானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து உடலம் கொக்குவிலில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் அஞ்சலியுரைகள் இடப்பெற்றன.

குறித்த அஞ்சலி உரைகளில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் , தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் என்.சிறிக்காந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உள்ளிட்ட பலரும் அஞ்சலி உரையாற்றினர்.

இறுதி ஊர்வல நிகழ்வுகளில் விநாயகமூர்த்தியின் உறவுகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

-tamilwin.com

TAGS: