இந்துக் கோவிலுக்கு ஒரு சட்டம்! விகாரைக்கு வேறொரு சட்டமா? எதிர்க் கட்சித் தலைவர்

001பிள்ளையார் ஆலயத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் பிரதேச சபை சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தயங்குவது ஏன்? பிள்ளையார் கோவிலுக்கு ஒரு சட்டம்; பௌத்த விகாரைக்கு வேறொரு சட்டமா? என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் தெரிவுமுறை மற்றும் நாவற்குழி விகாரை தொடர்பில் பேசப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது,

“பிரதேச சபையின் முன் அனுமதி பெறப்படாமல் மட்டுவிலில் அமைக்கப்பட்ட பிள்ளையார் சிலை மற்றும் கொடிகாமம் பகுதியில் அனுமதி பெற்றதுக்கு மேலதிகமாக அமைக்கப்பட்ட கட்டடம் ஆகியவற்றுக்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபை வழக்குத் தாக்கல் செய்தது.

எனினும், அதே சபையிடம் அனுமதி பெறப்படாமல் நாவற்குழியில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டுப் பணிகள் இடம்பெற்று வந்தன.

இந்தநிலையில், சாவகச்சேரி பிரதேச சபை அனுமதி பெறாத சட்டவிரோத கட்டடம் எனத் தெரிவித்து விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு தடையுத்தரவை மட்டும் பிறப்பித்துள்ளது. விகாரைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. பிள்ளையார் கோயிலுக்கு ஒரு சட்டம்; விகாரைக்கு வேறொரு சட்டமா? என்றார்.

“சாவகச்சேரி பிரதேச சபை அதிகாரிகள் உடனடியாக சட்டவிரோதமாக இடம்பெற்ற கட்டட வேலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா அறிவுறுத்தினார்.

-tamilwin.com

TAGS: