நாட்டில் சட்டத்தையும், நீதியையும் உத்தரவாதப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி இருக்கின்றனர்.
இனவாதச் சக்திகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்க முடியாத நிலைமை உருவாகி இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இன்று உருவாகி இருக்கும் கசப்பான உணர்வுகளை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறி இருக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பொன்றை நடத்திய வேளையிலேயே, முஸ்லிம் தரப்பு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது.
தொடர்ந்து நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களால் இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வு, நல்லெண்ணம் சீர்குலைந்து போகும் நிலைமை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட போதே ஜனாதிபதி இந்த அவசர சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களாக சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பை எதிர்பார்த்திருந்தனர்.
நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களிடையே தொடர்ந்தும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இனவாத சக்திகள் முஸ்லிம்களை இலக்கு வைத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய முஸ்லிம் தரப்பு உலமாக்கள், சிலரது செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு மோசமான நிலைக்கு மாற்றம் பெற்றிருப்பதாக எடுத்துரைத்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது உலமாக்கள் உட்பட முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியிடம் தமது சமூகத்தின் மனவேதனை தொடர்பில் கடும் கவலையை வெளியிட்டு ஒரு சிறுபான்மைச் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதை அரசு பார்த்துக் கொண்டிருக்கின்றதே என்ற கேள்வியை தொடுத்திருக்கின்றனர்.
பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்தில் பாதுகாப்புத் தரப்பும், அரசும் பாரபட்சமாக நடந்து கொள்வதாக மக்கள் அச்சம் கொண்டிருப்பதை இவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இத்தகையதொரு சந்திப்புக்கு தாங்கள் வந்தது ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்த்தேயாகும். பேச்சுக்கள் என்ற பெயரில் காலம் கடத்தப்படுவதை மக்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
மாநாடுகளும், சந்திப்புகளும், பேச்சுக்களும் காலம் கடத்தும் வகையில் நடந்த வண்ணமே உள்ளன. இதற்கு இறுதியான முடிவு காணப்பட வேண்டும்.
சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்களும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களதும் பிரச்சினைகள் கையாளப்பட வேண்டிய முறையில் பலத்த சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
குறிப்பாக கலகொட அத்தே ஞானசார தேரோ தொடர்பில் போதிய ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாகக் காணப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வு முப்தி ஜனாதிபதியிடம் விளக்கமளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
ஞானசார தேரரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி புத்த சமயத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதல்ல முஸ்லிம்களின் நோக்கம். அவரை ஜனாதிபதி நேரடியாக அழைத்து விசாரித்துத் தீர்வு காண வேண்டும்.
அதனைச் செய்யத் தவறியதன் காரணமாகவே பொதுபலசேனா தரப்பின் அடாவடித்தனங்கள் அதிகரிப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் மதத் தலைவர்களின் முறைப்பாடுகளை ஆழமாக செவிமடுத்த ஜனாதிபதி, இனியும் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தப்பட மாட்டாது எனவும், துரிதமாகத் தீர்வு காணப்படும் எனவும் உத்தரவாதமளித்துள்ளார்.
சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்போர் விடயத்தில் தாம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க உறுதி பூண்டிருப்பதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்திருக்கிறார்.
எந்தவொரு சமூகமும் தமது அரசின் மீது நம்பிக்கை இழக்கும் வகையில் நடந்து கொள்ளப் போவதில்லை எனவும் அனைத்து மக்களுக்கும் சமநீதியைப் பெற்றுக் கொடுப்பதே தனது கடப்பாடு எனவும் உறுதியளித்திருக்கிறார்.
நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் ஜனாதிபதி சர்வமதத் தலைவர்களைச் சந்தித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேசமயம் இனிமேல் மாதாந்தம் இதுபோன்ற சந்திப்புகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
எனினும் ஜனாதிபதி அளித்திருக்கும் உத்தரவாதம் காற்றில் பறக்கவிடப்படாமல் மிக விரைவாக சாதகமான நிலையை வெளிப்படுத்துமானால் மட்டுமே முஸ்லிம் சமூகம் நம்பிக்கை பெறக் கூடிய நிலை ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன நல்லிணக்கம், மத நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவதற்கு மக்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆன்மிகத் தலைவரொருவர் மாற்று மதத்தின் மீது பழிச்சொல் சுமத்துவது அநாகரிகமானதொரு செயற்பாடாகும். அது மதநிந்தனைக்குச் சமமானதொன்றாகும்.
முஸ்லிம் சமூகம் விடயத்தில் பொதுபலசேனாவும், ஞானசாரதேரரும் இந்தளவுக்கு ஆத்திரமும், கோபாவேசமும் கொள்வதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும்.
முஸ்லிம் சமூகம் ஒருபோதும் பௌத்த தர்மத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்படுவதை அங்கீகரிப்பதில்லை.ஒரு சமூகத்தின் மனஉணர்வுகளை மதிப்பதன் மூலமே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
இதற்கான அடித்தளத்தை ஆழமாக பதிக்க வேண்டிய கடப்பாட்டை நல்லாட்சி அரசு கொண்டிருக்கின்றது என்பதை மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எமது ஆலோசனையாகும்.
-tamilwin.com