ஆயுதப் போராட்டத்தை மீண்டும் கொண்டு வரும் அளவிற்கு பாரிய ஆபத்தாக மாறியுள்ள ஞானசார தேரரை கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளது வெட்கப்படவேண்டிய விடயம் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும், அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தை நிறைவு செய்த நாட்டில், சிறந்த புலனாய்வுத்துறையினர் உள்ள நாட்டில் ஒரு தேரரைக் கைது செய்ய 5 பொலிஸ் குழுக்களை அமைத்துள்ளமை வெட்கப்படவேண்டிய விடயம்.
நாட்டில் பகிரங்கமாக இனவாத கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டு வரும் ஞானசாரரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? அவரைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றவர்கள் யாவர்? என்பது தொடர்பில் வெளிப்படுத்தப்படவேண்டும்.
அவரது கருத்துகளால் சிங்கள இளைஞர்கள் மத்தியில் இனவெறி தூண்டப்படுகின்றது. மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு வழியமைத்துக் கொண்டு வரும் செயற்பாடு இன்று தொடர்கின்றதா?
ஞானசார தேரரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை அல்ல. ஆனால் இனவாதத்தை தூண்டி முஸ்லிம் மதத்தை அவமதித்து வரும் அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.
நாட்டில் அமைதி நிலை ஏற்பட வேண்டும். அவரைச் சுதந்திரமாக செயற்பட விட்டு வைப்பது நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
-tamilwin.com