யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் மீது இனவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரினால் தனது கால்களை இழந்த இளைஞன் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் ஒருவர் இனவாத ரீதியாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.
காலில் விழுப்புண் அடைந்த அவர் அமர்ந்திருந்த ஆசத்தை விட்டு எழும்புமாறும், தனக்கு அந்த ஆசனத்தை தருமாறும் இராணுவ சிப்பாய் மிரட்டியுள்ளார்.
சிங்களவர்களின் அடிமையாக இப்போது தமிழர்கள் உள்ளனர் என்றும், எங்களை கண்டால் எழுந்து நின்று மரியாதை தர வேண்டும் என்றும் இராணுவ சிப்பாய் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து கதிர்காமம் நோக்கி நேற்று சென்ற 1131 இலக்கத்தைக் கொண்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஏ-9 வீதியால் பேருந்து பயணித்த போது முகமாலைப் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து சிவில் உடையில் பல இராணுவத்தினர் ஏறியுள்ளனர்.
இதன்போது காலில் காயம் ஏற்பட்ட தமிழர் ஒருவர் ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில், வலுக்கட்டாயமாக அவரை எழுப்பி விட்டு, அந்த ஆசனத்தில் குறித்த இராணுவ சிப்பாய் அமர்ந்துள்ளார்.
இனவாத ரீதியாக கருத்துகளை தெரிவித்த இராணுவ சிப்பாய், தமிழர்களை அடிமைகள் என வசைபாடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்,
முள்ளிவாய்க்காலில் நீங்கள் எங்களை சுட்டதால் தான் எனது காலில் காயம் ஏற்பட்டது. எங்களது உறவுகளை அப்போது அழித்த நீங்கள் இப்போதும் எங்களை அடிமைகள் போல நடத்துகின்றீர்கள் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உங்களை நாங்கள் தான் கொன்றொழித்தோம். உங்களால் என்ன செய்ய முடிந்தது. புலிகள் அப்போது எங்களை கொன்றார்கள். இப்போது நீங்கள் எங்களின் அடிமைகள். உங்களால் இப்போது எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் மேலே இருக்க நீங்கள் கீழே இருக்க வேண்டும். தமிழர்கள் இப்போது சிங்களவர்களின் அடிமைகள் என கூறிய இராணுவ சிப்பாய், குறித்த இளைஞரை தாக்கவும் முயன்றுள்ளார்.
பேருந்தில் பயணித்த சில தமிழர்களும் குறித்த இராணுவ சிப்பாய்க்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
இச்சம்பவம் நடைபெற்ற போது பேருந்தில் இராணுவத்தினர் சிவில் உடையில் இருந்துள்ளனர். சிறிதளவான தமிழர்களாகவும் காணப்பட்டார்கள்.
இராணுவ சிப்பாயின் இனவாத தாக்குதலுக்கு உள்ளான இளைஞனருக்கு ஆதரவாக பேச முற்பட்ட தமிழர்களையும் அதில் பயணித்த இராணுவத்தினர் மிரட்டியுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடமாகாணத்தில் பெருமளவான இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், தாயகத்திலுள்ள மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் தமிழர்கள் இன்றும் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்றொழித்த போதும், அதற்கான நீதியான விசாரணைகள் இதுவரை இடம்பெறவில்லை. இதற்கான வாய்ப்பு தற்போது அற்றுப் போயுள்ளதாகவே உள்ளது.
இதனால் துணிவு கொண்ட இராணுவத்தினர் தமிழர்களை மேலும் மேலும் அடிமைப்படுத்தும் நடவடிகையில் ஈடுபட்டு வருவதாக தாயக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
-tamilwin.com