போராளிகளின் குருதியினால் உருவான மாகாணசபை கேலிக்குரியதாக மாறியுள்ளது?

karunakaran1பொதுமக்களினதும் போராளிகளினதும் குருதியினால் உருவான மாகாணசபை இன்று கேலிக்குரியதாக மாறியுள்ளது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.)தியாகிகள் தினம் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கிழக்கு மாகாண தலைமைக்காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாணசபையில் இன்று ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைக்கு முழுக்காரணம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு இருப்பவர்கள்தான்.

பொதுமக்களினதும் போராளிகளினதும் குருதியினால் உருவானது மாகாணசபையாகும். இந்த வகையில் இன்று வடக்கு மாகாணசபை கேலிக்குரியதாக மாறியுள்ளது.

ஒரு வடமாகாணசபையினை நிர்வகிக்கமுடியாத தமிழர்களுக்கு தமிழீழம் வழங்கியிருந்தால் தமிழர்களின் நிலை என்ன ஆகியிருக்கும் என இன்று தென்னிலங்கையில் உள்ள தமிழ்தேசியத்தினை விரும்பாத கட்சிகளும் பெரும்பான்பையின கட்சிகளும் பேசுமளவுக்கு வடமாகாணசபை இன்றுவந்துள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு தமிழ் தேசியத்திற்கு எதிராக போராடி ஒரு தலைமைப்பதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் என நினைத்து செயற்படும் இவர்களே இன்று வடமாகாணசபையில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முழுக்காரணமாகும்.

இந்த மாகாணசபை முறைமையினையை ஏற்றுக்கொள்ளவில்லையென சொல்கின்றார்கள். இந்த மாகாணசபை முறையை வெறுக்கின்றோம் என்கின்றார்கள்.

வடமாகாணசபையின் ஏற்பாட்டில் இன்றைய முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றபோது மாகாணசபையினை நாங்கள் அங்கீகரிக்கமாட்டோம்.

அந்த நிகழ்வில் கலந்துகொள்ளமாட்டோம் என்று அறிக்கைவிட்டவர்கள் வடமாகாணசபையில் ஒரு குழப்பம் ஏற்பட்டபோது அதனை திரவுபடுத்தி தமது அரசியல் காய்நகர்த்தலை நகர்த்தவேண்டும் என்பதற்காக முதலமைச்சரை ஆதரித்து போர்க்கொடி தூக்குகின்றனர், ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஒரு மலரைப்பிடித்துக்கொண்டு எங்களுக்கு தலைமைதாங்க வாருங்கள் என்று அழைக்கின்றார்.

அவர்கள் சரியான அரசியல் நேர்பார்வையுடையவர்களாக இருந்தால் சீ.வி.விக்னேஸ்வரனை மாகாணசபைக்கு வெளியில் வரச்சொல்லி தலைமைதாங்க அழைக்கவேண்டும்.

மாகாண முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டுவந்து எங்களுக்கு தலைமைதாங்குகள் என்று அழைக்கவேண்டும்.

மாகாணசபை முறைமையினை எதிர்த்தவர்கள் ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவ்வாறு அந்த மாகாணசபையின் முதலமைச்சரை அழைக்கமுடியும்.இதில் இருந்து இந்த கட்சிக்காரர்களின் கபடத்தனங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றது.

இலட்சக்கணக்கான பொதுமக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் நூற்றுக்கணக்கான தலைவர்களையும் நாங்கள் இழந்துள்ளோம்.

அவர்களின் ஆவியின் மேல் நின்று அரசியல்செய்துகொண்டிருக்கும் நாங்கள் எமது மக்களின் தலையில் கொச்சிக்காயை அரைத்து அவர்களை படுகுழிக்குள் தள்ளவேண்டாம் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

நீங்கள் உண்மையாக மக்களுக்காக அரசியல்செய்யபவர்கள் என்றால் தமிழர்கள் இந்த நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு போராடுவீர்களேயொழிய உங்களது கட்சியை நிலைநிறுத்துவதற்கு போராடினீர்கள் என்றால் தமிழ் மக்களினால் துரோகிகளாக பார்க்கும் நிலை ஒரு காலத்தில் ஏற்படும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

 -tamilwin.com
TAGS: