ஐ.நா அரங்கை திரும்பிப்பார்க்க வைத்த தாயும் மகனும்! பிரதமர் தன் வாக்கை நிறைவேற்றுவாரா?

ranil_wickramasingheநேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்றபோது 17 வயது சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தான்.

ஐக்கியநாடுகள் சபைக்கு தனது தாய் சகிதம் வருகைத் தந்து தமது கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இன்றுவரை தீர்வுகள் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடிவருகின்றனர் இந்தத் தாயும் மகனும்.

அருள்வதனா சுந்தர்ராஜ் என்ற பெண்ணின் கனவர் 2009ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தொடர்ந்தும் 8 வருடங்களாக தமக்கு தீர்வு கிடைக்க வேண்டி போராடிவருகின்றனர்.

குறிப்பாக இவர் தனது கணவரைத் தேடித்தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறியப்படுத்தி இருந்தார் எனினும்.,

தற்போது அந்தக் கடிதத்திற்கான உரிய தீர்வு, கடிதம் அனுப்பப்பட்டு 2 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் எட்டப்படாத நிலையிலேயே தாயும், மகனும் ஐக்கிய நாடுகளிடமும் நேற்று முறையிட்டுள்ளனர்.

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு தீர்வு எட்டப்படும் என்று கூறியது வெறும் கண் துடைப்பா என்பதும் இன்றைய நிலையில் கேள்விக்குறியாகிவிட்டது.

யுத்தம் நிறைவடைந்த நிலையில் இன்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான தீர்வுகள் பெற்றுக் கொடுப்பதில் உள்ள இழுபறி நிலையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துரைக்கப்பட்டுவிட்டது.

இதற்கு சர்வதேசத்தின் பதில் எவ்வாறு அமையும்? என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில்.,

இலங்கை நீண்டகாலமாக யுத்தத்திற்கு முகம் கொடுத்து வந்தது இதன் காரணமாக கணக்கற்றவர்கள் காணாமல் போய் உள்ளார்கள். அதனால் காணாமல் போனோர் அலுவலகம் அத்தியாவசியமானது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் தற்போது பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பு கொடுக்க வேண்டும். அதற்கடுத்து இந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதும் மிக முக்கியம் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்குமா? பிரதமர் தான் கூறியது போல காணாமல் போனோருக்கான தீர்வு கிடைக்குமா என்பதும் காலம் கூற வேண்டிய பதில்.

யுத்தத்தினால் காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் ஒரு புறம் நடைபெற்று கொண்டு இருக்கும் வேளையில் அவர்கள் சார்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் கதவுகள் தட்டப்பட்டு விட்டது.

இதற்கு அரசு விரைந்து தீர்வுகள் எடுக்குமா? ஐ.நா எவ்வாறான பார்வையினை இந்த விடயத்தில் செலுத்தும் என்பது இப்போதைக்கு மக்களின் எதிர்பார்ப்பு கலந்த நம்பிக்கை மட்டுமே.

-tamilwin.com

TAGS: