படையினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் விசாரணை அவசியம்!

Balakumaranபொறுப்புடன் நடக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆற்றுகின்ற உரைகளைக் கேட்கும் போதெல்லாம் ஏன்தான் இப்படி என்று எண்ணத்தோன்றும்.

அந்தளவுக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தங்களை ஒரு நிலையாளர்கள் போல காட்டிக் கொள்ள முனைகின்றனர்.

நம் நாட்டைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் சரி, இன யுத்தம் சரி, அனைத்தும் பேரினவாதத்தின் கொடுமையின் விளைவுகளாகும்.

தமிழினத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பேரினவாத ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் அமுலாக்கிய அரசியலமைப்புகளும் திட்டமிடல்களும் சிறுபான்மைத் தமிழினத்தை மிக மோசமாகப் பாதித்தது.

தவிர, காலத்துக்குக் காலம் தமிழின அழிப்புகளும் சர்வ சாதாரணமாக நடந்தேறின. தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் இனக் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்நிலையிலேயே ஆயுதப் போராட்டம் என்ற சிந்தனை முகிழ்ந்தது.ஆயுதப் போராட்ட சிந்தனைகூட தமிழனத் தலைவர்களின் அகிம்சைப் போராட்டங்கள் நசுக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு விடுதலையைத் தரும் என தமிழ் தலைவர்கள் மேடையேறி உசுப்பேத்திய நிலையில் ஏற்பட்டதுதான்.

இலங்கை ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வாழ்வது முடியாத காரியம் என்ற கட்டத்தில் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை தமிழர் தாயகத்தில் தோற்றமுற்றன.

அவற்றின் பாதை பல வழிப்பட்டு ஈற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் மண் மீட்புப் போரை முன்னெடுக்கும் விடுதலைப் போராட்ட அமைப்பாக நின்று நிலைத்தது.

ஒருபுறம் இன யுத்தம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் தீர்வை எட்டுவதற்கு எவரும் உடன்பட்டிலர்.

ஈற்றில் உலக நாடுகளின் உதவியோடு வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகக் கொடும் போர் நடந்தது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாமல் போயிற்று.

தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொன்று அழித்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றது.

சரணடைந்த புலிப் போராளிகள் எங்கே? என்பது இன்று வரை தெரியவில்லை.

நிலைமை இதுவாக இருக்கையில் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி விசாரிப்பதென்றால் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என்று நம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர் எனில், அதன் பொருள் புரியவில்லை.

போரில் அழிக்கப்பட்ட ஓர் அமைப்புத் தொடர் பில் விசாரணை நடத்துவது எங்ஙனம் சாத்தியமாகும்?அதேநேரம் சட்டப்படி காப்பாற்ற வேண்டிய படையினரிடம், ஒப்படைக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதே பொருத்துடையதும் நியாயமானதுமாகும்.

– Valampuri

TAGS: