மன்னார் கடற்படுகையில் 60 வருடங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் உள்ளமை கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ஐந்து பில்லியன் கன அடி கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஒன்பது டிரில்லியன் கன அடி உள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது கணக்கு குழு அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் எண்ணெய் ஆய்வு நடவடிக்கையின் தற்போதைய நிலையை தெளிவுபடுத்தும் அறிக்கையின் ஊடாக குறித்த எண்ணெய் மற்றும் எரிவாயு சுமார் 60 வருட காலத்திற்கு இந்த நாட்டு பயன்பாட்டுக்கு போதுமானதென தெரியவந்துள்ளது.
இந்த எண்ணெய் கிணறு அகழ்விலிருந்து எண்ணெய் தயாரிப்பு வரையிலான நடவடிக்கைகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான செலவை ஏற்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் கடற்படுகையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளமையினால், பொருத்தமான ஆய்வாளர் ஒருவரை இணைத்துக் கொண்டு அந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் கடற்படுகையில் இனங்காணப்பட்டுள்ள எண்ணெய் வளங்களை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
இதற்காக தமது நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தப் பகுதியில் செயற்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.