பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரர் தேரர் தற்போது ஆட்சிக் கனவோடு செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அண்மையில் பொதுபலசேனாவினர் “அடுத்த ஜனாதிபதியாக ஞானசார தேரர் வரவேண்டும் என மக்கள் விரும்புவதாக தெரிவித்திருந்தனர்.
ஏற்கனவே மகிந்த தரப்பு ஆட்சிக் கனவில் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு போட்டியாக ஞானசாரர் உருவெடுத்து விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை தேரரின் செயற்பாடுகளுக்கும் மகிந்த தரப்புக்கும் தொடர்பு உள்ளதாக ஒரு சிலர் தெரிவித்து வருகின்ற வேளையில் தமக்கும் மகிந்த மற்றும் கோத்தபாயவிற்கும் எதுவித தொடர்பும் இல்லை என ஞானசாரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் ஊடகம் ஒன்றிக்கு அவர் கருத்து வழங்கிய போது,
பொதுபலசேனாவின் செயற்பாடுகளுக்குப் பின்னணியில் வலுவான ஓர் நாடு உள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது.
அதில் எந்த விதமான உண்மைத்தன்மையும் இல்லை. அப்படி ஓர் நாடு இருந்தால் இப்போது நான் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பேன்.
அரசியல்வாதிகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாப்போல் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவை பொய்யானவை எமது செயற்பாடுகளின் பின்புலத்தில் எந்த நாடும் இல்லை.
மகிந்த ராஜபக்சவோ அல்லது கோத்தபாயவோ எவருமே எமக்கு பின்னணியில் இல்லை. புலிகளை விடவும் 100 மடங்கு ஆபத்தான விடயமாக அமையும் இஸ்லாம் அடிப்படைவாதம் நாட்டில் உருவெடுத்து வளர்ந்து வருகின்றது.
அதில் இருந்து நாட்டையும், அனைத்து மக்களையும் பாதுகாக்கவே பொதுபலசேனா செயற்பட்டு வருகின்றது. இதற்காக தொடர்ந்தும் போராடும்.
புத்தபோதனையின் அடிப்படையில் வாழும் என்னை திருடர்கள் பயங்கரவாதி என விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மைகள் வெளிவரும் போது தெரியவரும்.
அப்போது நான் உயிருடன் இல்லாவிட்டாலும் கூட மக்கள் எனக்கு சிலை வைப்பார்கள்.
2007ஆம் ஆண்டு புலிகளுடனான போரை ஆயுத ரீதியில் முடிவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டபோது அதற்கு சமாதானப் பேரவை போன்றன எதிர்ப்பை வெளியிட்டன.
அந்த காலப்பகுதியில் சமாதான பேரவையை தோல்வியடையச் செய்ததும் நான் தான். யுத்த நிறுத்த காலப்பகுதியிலும் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்தோம்.
1998 ஆம் ஆண்டில் இருந்து எமது போராட்டம் ஆரம்பித்தது. 2009 ஆம் ஆண்டு போராட்டத்திற்கான வெற்றி எமக்கு கிடைத்தது. அன்று நாட்டிற்கு தேவைப்பட்ட ஆன்மீக தலைமைத்துவத்தை வழங்கினோம்.
இன்றுள்ள சவால்களையும் அதே நிலைப்பாட்டில் இருந்து வெற்றிகொள்வோம் எனவும் ஞானசாரதேரர் கருத்து தெரிவித்துள்ளார்.
தேரரின் இந்தக் கருத்துகள் மூலமாக அவர் மக்கள் மத்தியில் ஆதரவு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகின்றதாக கூறப்படுகின்றது.
ஆரம்பகாலம் முதல் இலங்கையின் அரசியல் நகர்வானது விடுதலைப்புலிகளுடனான போரை முன்னிறுத்தியே நகர்ந்து வருகின்றது.
அதே வகையில் ஞானசாரதேரரும் தற்போது புலிகளுடனான யுத்தவெற்றிக்கு தானும் ஓர் காரணம் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
தற்போது அஸ்கிரிய பீடாதிபதிகளும் அரசுக்கு எதிரான சில கருத்துகளை முன்வைத்து வருவதோடு, ஞானசார தேரரின் கருத்துகளுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எனவே எதிர்காலத்தில் தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதில் ஞானசாரரின் பங்களிப்பு எவ்வாறு அமையும் என்பதும் அரசின் நகர்வு எவ்வாறு அமையும் என்பதும் குழப்பமான விடயமாகவே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஞானசாரரின் செயற்பாடுகளுக்கு மகிந்த, கோத்தபாயவே காரணம் என்ற குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கொள்ளவே இவ்வாறான கருத்துகளை அவர் வெளியிட்டு வருகின்றார் என அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
-tamilwin.com