2009இற்கு முதலே பிரபாகரன் கொல்லப்பட்டிருப்பார்! அன்று காப்பாற்றியது யார்?

prabhakaran01இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் தற்போது ஜெனீவாவில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றது என அமைச்சர் ஒருவர் ஜெனீவாவில் ஒத்துக்கொண்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயங்களை அண்மையில் ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவ மேஜருமான சரத் வீரசேகர முலமாகவே வெளிவந்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறுகையில்,

இலங்கை யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரை இந்த அரசு சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று கொன்று விட திட்டம் தீட்டியுள்ளது.

மகிந்த ராஜபக்ச யுத்தம் செய்தது மேற்குலக நாடுகளையும் புலம் பெயர்ந்த தமிழர்களையும் எதிர்த்துக் கொண்டே ஆகும்.

யுத்தமும் அரசியலும் இணைந்தே காணப்படும். யுத்தம் இல்லாமல் அரசியல் இருக்கலாம் ஆனால் அரசியல் இல்லாமல் எப்போதுமே யுத்தங்கள் ஏற்படுவதில்லை.

1987ஆம் ஆண்டு வடமராட்சி தாக்குதலின் போது பிரபாகரனைக் கொல்வதற்கு இரண்டு மூன்று நாட்களே எஞ்சியிருந்தது. ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கண்களில் கண்ணீரை நான் பார்த்தேன்.

விஜேய செனவிரத்ன கண்களிலும் கண்ணீரைப் பார்த்தேன் காரணம் மூன்று நாட்களே எஞ்சியிருந்தது யுத்தத்தினை நிறைவு செய்வதற்கு.

அப்போது இந்தியாவில் இருந்து வந்து இதனை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்கள். அதன் காரணமாக அன்றைய அரசியல் தலைவர்கள் பயந்து தாக்குதலை நிறுத்தினார்கள்.

இல்லையென்றால் 2009 இற்கு முன்னரே பிரபாகரன் கொல்லப்பட்டிருப்பார். யுத்தம் அப்போதே நிறைவு செய்யப்பட்டிருக்கும். அப்போது அவர் காப்பாற்றப்பட்டு விட்டார்.

ஒரு யுத்தத்தினை தொடர்வதா அல்லது முடிவு செய்வதா என அரசாங்கமே தீர்மானிக்கும் என்பதே உண்மை. 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி யுத்தம் நிறைவு செய்யப்பட்டது.

ஆனால் அதற்கு முதலே 12, 13ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் இருந்தும் இங்கிலாந்து நாட்டில் இருந்தும் வந்து யுத்தத்தை நிறைவு செய்யுமாறு மகிந்த ராஜபக்சவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஜி.எஸ்.பி பிளஸ் தரமாட்டோம், முற்றாக பொருளாதார தடை விதிப்போம் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. அன்று மகிந்த யுத்தத்தை நிறுத்தியிருந்தால் இன்று சரத் பொன்சேகா எங்கிருப்பார் என்பது தெரியாது.

ஆனால் எதற்கும் பணியாமல் யுத்தம் தொடர்ந்தது அதனாலேயே உலகிலேயே பயங்கரமான தீவிரவாதிகளிடம் இருந்து வெற்றியும் கிட்டியது.

அன்று அவ்வாறு மகிந்த செய்ததன் காரணத்தினாலேயே மேற்கு நாடுகளும், புலம்பெயர் தமிழர்களும் இணைந்து மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தார்கள்.

அதனாலேயே ஜோன்கெரி கூறினார் நாமும் இந்த வெற்றியில் பங்களிப்பு செய்துள்ளோம் என்று. எப்படி அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு இலங்கை தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட முடியும்.

இதில் இருந்து சர்வதேச சதிகள் தெளிவாகின்றன. ஆனால் முதலாவது ஜெனிவாவில் இலங்கைக்கு சாதகமாகவே தீர்மானம் எடுக்கப்பட்டது. யுத்தம் முடிந்து விட்டது இனி நாட்டை அபிவிருத்தி செய்யுங்கள் எனவும் கூறப்பட்டது.

அதன் பின்னர் மேற்கு நாடுகளும், புலம்பெயர் தமிழர்களும் இணைந்தே இலங்கைக்கு ஜெனீவாவில் நெருக்கடிகளை ஏற்படுத்தினர். அவர்கள் 2013ஆம் ஆண்டும் 2014ஆம் ஆண்டும் அறிக்கைகள் கொடுத்தார்கள்.

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு இலங்கை போர்க் குற்றம் புரிந்தது என தீர்மானிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்றம் அவசியம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

அதேபோல இலங்கையில் போர்க்குற்றம் செய்யப்பட்டது என்பதை தேசத்துரோகியான அமைச்சர் ஒருவர் ஒப்புகொண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு இணக்கம் தெரிவித்தார்.

மேலும் இலங்கை அரசும் இப்போது போர்க்குற்றம் நடந்துள்ளதாக ஒப்புகொண்டுள்ளது. அதன் காரணமாகவே இப்போது ஜெனிவாவில் பாரிய அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

47 நாடுகள் எமது நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றது. அத்தோடு இலங்கையும் கூட இதனை வலியுறுத்தி வருகின்றது.

விடுதலைப்புலிகளுக்கு அரசு சார்பற்ற நிறுவனங்கள் 30இற்கும் மேற்பட்டவையுடன் தொடர்பு உள்ளது. அவர்களும் புலம்பெயர் தமிழர்களும் இணைந்து ஜெனீவாவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர்கள் வடக்கு தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் இன்றும் இராணுவத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குற்றச்சாட்டினை செய்துள்ளனர்.

இந்த விடயம் உண்மையா? எனவே இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் ஒப்புக்கொண்டதும் இப்போது இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதற்கு காரணமாகும் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

TAGS: