புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்:எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா

arasiyalamaippuபுதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என அரசியல் அமைப்பு மீளாய்வு மக்கள் பிரதிநிதிகள் பேரவையின் அதிவிசேட நிர்வாக சேவை அதிகாரி எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பினை தயாரித்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கருத்தறியும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதமர் செயலகம், மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் மக்களின் கருத்துகளை உள்வாங்கி முதன்முறையாக அரசியல் யாப்பு ஒன்று தயாரிக்கப்படும்.

கடந்த காலத்தினைப் போன்று இல்லாமல் தேசிய கட்சிகள் முதல் தடவையாக ஒன்றிணைந்து இந்த அரசியல்யாப்பினை உருவாக்குதினால் அதனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படப்போவதில்லை.

கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இரண்டு அரசியல் யாப்புகள் இந்த நாட்டுக்கு பயன்பட்டதாக நான் அறியவில்லை.

அந்த அரசியல் யாப்புகள் இனங்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்தாத காரணத்தினால் அதனை தோல்வியான அரசியல்யாப்புகளாகவே நோக்கவேண்டியுள்ளது.

மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு ஆளுனர்கள் நியமிக்கப்பட்டதை தவிர வேறு எந்த வெற்றியையும் அரசியல்யாப்புகள் கொண்டிருக்கவில்லையென்பது உண்மையாகும்.

சிறுபான்மை சமூகத்திற்கு அதிகாரங்கள் வழங்கும்போதே நாட்டை முன்னேற்றமுடியும் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன கருதியதன் காரணமாகவே அந்த சட்டத்தினை உருவாக்கினார்.

ஆனால் அதனைக்கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் காணவில்லை,நாட்டை முன்னேற்றவும் இல்லை.மாறாக 30வருடகால உள்நாட்டு யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

அதன்மூலம் பெற்றுக்கொண்ட பாடங்களைக்கொண்டு புதிய அரசாங்கம் மக்களின் விருப்பங்களைக்கொண்டதாக புதிய யாப்பினை உருவாக்கி அதன் மூலமாக அனைத்து இன மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற எண்ணத்துடன் ஒன்றுபட்டு பயணிக்கும் ஒரு இனத்தினை இன்னுமொரு இனம் அரவணைத்துவாழும் நிலையினை உருவாக்கும் வகையில் இந்த புதிய யாப்பினை உருவாக்கும் பணியை மேற்கொண்டுவருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நாட்டு மக்களிடம் ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்து மக்கள் ஆட்சி ஏற்படும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அவரது கோரிக்கை மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிலும் விசேடமாக வடகிழக்கு மக்கள் அதற்கு அமோக ஆதரவளித்தன் காரணமாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதேபோன்று பிரதமரும் மக்களிடம் சென்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்.மக்கள் ஆட்சி ஏற்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை அளித்திருந்தார்.

அதனடிப்படையில் 2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது நாடாளுமன்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தபோது அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட நாடாளுமன்றத்தினை அரசியலமைப்பு உருவாக்கும் சபையாக மாற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களை குழுக்களாக அமைத்து புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்காக எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள்,ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் சட்டவாதிகள்,என பல்வேறு தரப்பினரையும் கொண்ட பிரதமர் தலைமையிலான 21பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு தினங்கள் தங்கியிருந்து இவ்வாறான பொதுமக்களை அறிவூட்டும் நடவடிக்கைகளை நாங்கள் அந்த குழுக்கள் மூலம் மேற்கொண்டுவருகின்றோம்.

சமய தலைவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரையில் புதிய அரசியலமைப்புக்காக தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

கடந்த 2016 ஆம்ஆண்டு பொதுமக்களிடம் இருந்துபெறப்பட்ட கருத்துகள் அனைத்தையும் உள்ளடக்கியதான அறிக்கையினை கையளித்துள்ளோம்.

அதனை நாடாளுமன்றத்தின் ஆறு பகுதிகளாக பிரித்து ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது.அந்த ஆறு குழுக்களிலும் உள்ளவர்கள் தலைவர்களாக உள்ளகாரணத்தினால் குறித்த அறிக்கையில் உள்ள மக்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் சில எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நடைபெறும் விடயங்களை அவற்றிக்கு மாறாக மக்களிடம் தெரிவித்துவரும் நிகழ்வுகளை அவதானிக்கமுடிகின்றது.

அதேபோன்று சில மதத்தலைவர்களும் புதிய அரசியலமைப்பினை எதிர்ப்பவர்களும் எதிரான கருத்துகளை வெளியிட்டுவருவதை காணமுடிகின்றது.

இந்த ஆறு குழுக்களையும் இணைத்து பிரதானமாக இருக்கும் குழுவுக்கு தலைவராக இருப்பவர் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பிரான இருக்கின்ற பந்துல குணவர்த்தவாகும்.

அவரை தலைவராக நியமித்தன் மூலம் இந்த குழுவின் உண்மைத்தன்மை வெளிப்படையாகவுள்ளது என அரசியல் அமைப்பு மீளாய்வு மக்கள் பிரதிநிதிகள் பேரவையின் அதிவிசேட நிர்வாக சேவை அதிகாரி எஸ்.வின்ஸ்டன் பத்திராஜா குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: